Wednesday, July 19, 2017

திருப்பதி கோயில் – அதிகம் தெரியாத உண்மைகளும் வரலாறும் – பகுதி- 2


திருப்பதி கோயில் உண்மையில் ஒரு புத்த மத விகாரம் (புத்தகோயில்), என்றோம் பின் முதல் பகுதியில் அது தொடர்பான இந்து மத பின்னணி புராண இதிகாச சான்றுகளையும் அதில் உள்ள கதைகளை பார்த்தோம்.

புத்தர் கோயில் என்று சொன்னாயே அது பற்றி போன பகுதிகளில் ஒன்றுமே சொல்லவில்லையே  என்று கேட்கும் நண்பர்களுக்கு நான் சொல்வது சற்று பொறுமையாக இருங்கள், அது புத்தர் கோயில் என்பது இந்த பகுதியிலும் நான் நிறுவ வரவில்லை, கடைசி இரண்டு பகுதிகளில் தான் அது பற்றி சொல்லப்போகிறோம்.


அப்படி என்றால் இறுதி இரண்டு பகுதகளை மட்டும் நேரடியாக போட வேண்டியது தானே என்று கேட்கலாம், பிரச்சனை ஒன்றும் இல்லை, பின்னர் நாசாவில் வேலை செய்யும் நமது வாட்சப் விஞ்ஞானிகள் அந்த குருப்பில் இப்படி சொன்னார்கள் அப்படி சொன்னார்கள் என்று இம்சை செய்வார்கள்,

அதனால் தான் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நாம் இதை நிருபிக்கவேண்டும் என்பதாலே தான் இத்தனை பகுதிகள் மற்றும் விளக்கங்கள். அது ஒரு புத்தர் கோயில் என்று நிறுவதற்கு முன் அது விஷ்ணு கோயில் அல்ல என்பதன் விளக்கங்களே முதல் மூன்று பகுதிகளின் நோக்கம்

இதுவரை முதல் பகுதியல் வேங்கடச்சல இதிகாச மாலையின் படி நாம் அறிந்துகொண்டது, சும்மா பூட்டி கிடந்த கோயிலை, யார் அபகரிப்பது என்ற போட்டியில் தந்திரமாக ராமானுஜர் வெற்றி பெற்றதால் 11-ஆம் நூற்றாண்டில், கோயில் வைணவர் வசம் சிக்கியது, பின் கிருஷ்ணதேவராயனின் காலத்தில் வைணவர் கோயிலாக நிரந்தரம் ஆக்கப்பட்டது.

இருப்பினும் 11ஆம் நூற்றாண்டுக்கு பின்னும் பலர் அந்த கோயிலை முருகன் கோயில் என்றே சொல்லி வந்தனர், நம் தமிழ் நாட்டில் வேங்கடசுப்பிரமணியன் என்ற பெயரை மிக சாதாரணமாக காணலாம், அதற்கு காரணமும் இந்த வேங்கட மலை உரிமை பிரச்சனை தான் காரணம்.


வேங்கட மலை முருகனுக்கே சொந்தம் என்று:

  1. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணாச்சல கவிராயர்
  2. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவஞான முனிவர்
  3. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர்
  4. 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார்

போன்ற பலர் தங்கள் நூல்களில், வேங்கடம் முருகன் கோயிலே என்று பல பல பாடல்களில் உரிமை கொண்டாடி உள்ளனர். அது பற்றிய அந்த சுவையான பாடல்களை தேர்ந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் 1988-ல் புதுச்சேரியை சேர்ந்த முனைவர் சுந்தர சண்முகனார் எழுதிய வேங்கட வேலவன் என்ற நூலில் இந்த பாடல்கள் தொகுப்பட்டு இருக்கிறது கூகிளில் தேடி தேரிந்து கொள்ளலாம்.

11ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் வைணவர் வசம் ஆகிவிட்டது, எனவே அதற்கு பின் உள்ள இலக்கிய சான்றுகள் நமக்கு நேரடியாக எந்த உதவியும் செய்யபோவதில்லை. எனவே அதற்கு முன் அந்த கோயிலின் நிலைமை என்ன என்று இலக்கிய சான்றுகளை நோக்குவோம்.

இந்த இலக்கிய சான்றுகளை சமஸ்கிருதம் மற்றும் தமிழ் நூல்கள் என்று இருபிரிவுகளாக பார்க்கலாம்.

முதலில் சமஸ்கிருத நூல்கள் என்று பார்த்தால், மகாபாரதம், ராமாயணம், குப்தர்களின் காலத்தில்(கிபி 2-3 நூற்றாண்டு) வாழ்ந்த காளிதாசரின் நூல்கள் என்று எந்த சம்ஸ்கிருத நூல்களிலும் வேங்கட மலை பற்றியோ அங்கே வாழும் ஸ்ரீநிவாசன் பற்றியோ எந்த குறிப்புகளும் இல்லை.

காப்பியங்களை விட்டு விட்டு புராணங்களை பார்த்தோமானால், மிக பிரபலமான விஷ்ணு புராணத்திலோ அல்லது பாகவத புராணத்திலோ கூட வேங்கட மலை பற்றியும் அங்கே இருக்கும் கடவுளை பற்றியும் எந்த குறிப்பும் இல்லை. இவை இரண்டும் 9-10 நூற்றாண்டில் எழுதப்பட்டவை.

ஒருவேளை வட இந்திய மக்கள் தென்னிந்தியாவுடன் மதம் சார்ந்த பெரும் தொடர்பு கொள்ளவில்லையோ என விடமுடியாது, ஏனெனில், பாரதமும் ராமாயணமும் பல்லவர் காலத்தில் 7-8 நூற்றாண்டுகளில் தமிழகத்தில் பெரும் சிறப்புடன் விளங்கி வந்தது. பல கோயில்களில் இந்த புராணபாராயணம் அரசர்களின் ஆதரவுடன் சிறப்பாக நடந்துவந்தது தென்னிந்தியர் காசி செல்வதும் வடஇந்தியர் குமரிகடலுக்கு வருவது பற்றியும் மணிமேகலையில் சொல்லப்படுகிறது.

ராமானுஜர் காலமான 11ஆம் நூற்றாண்டுக்கு பிறகு எழுத்தப்பட்ட நூல்களான மிக மிக பிற்காலத்தை சேர்ந்த வராக புராணம், பவிஷ்யஜோதிர் புராணங்களில் மட்டுமே திருப்பதி தல புராணக்கதை பற்றி தெளிவாக சொல்கிறது, அதற்கு முந்தைய எந்த நூல்களும் எதுவும் சொல்ல்வதில்லை


தமிழ் இலக்கிய சான்றுகளை பார்த்தோம் என்றால், அதாவது ராமானுஜர் காலத்துக்கு முன்பு உள்ள காலத்தில், வேங்கடம் என்ற சொல் தொல்காப்பியம் மற்றும் சிலப்பதிகாரம் என்ற இரண்டு நூல்களில் மட்டுமே வருகிறது. இதில் ஒரு வேடிக்கையான வினோதம் என்னவென்றால் சிலப்பதிகாரத்தின் இரண்டாம் பாகம் போல எழுதப்பட்ட மணிமேகலையில் ஒரே ஒருஇடத்தில் கூட வேங்கடம் அல்லது வேங்கடமலை என்ற சொல் கூட பயன்படுத்தப்படவில்லை\

முதலில் தொல்காப்பியம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்,

“வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து “

என்ற வரிகளுடன் இந்த பாடல் தொடங்குகிறது, உடனே தமிழ் அறிஞர் என சொல்லிக்கொள்ளும் வைணவ பார்பனர்கள், பார்த்தாயா தொல்காபியத்தில்; வேங்கடம் என்று சொல்லியிருகிறது என்பார்கள், இதில் கவனிக்க வேண்டியது வேங்கடம் என்னும் சொல் அங்கு என்ன பொருளில் சொல்லப்பட்டது என்பதைத்தான் நாம் கவனிக்கவேண்டும் 

வடக்கே வேங்கடம் முதல் தெற்கே தென்குமரி வரை எல்லையாக கொண்ட தமிழ் பேசும் நிலப்பகுதி என்று மட்டும் தான் சொல்கிறதே தவிர, அங்கு விஷ்ணு இருப்பதாக சொல்லப்படவில்லை.

அடுத்து சிலப்பதிகாரத்தில் பார்த்தால்

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல-
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,

இந்த வரிகள் சிலப்பதிகாரத்தில், மதுரை காண்டம், காடுகாண் காதை பகுதியில் 41-50ஆவது வரிகளில் வருகிறது, இதில் எந்த வித சந்தேகத்துக்கும் இடமில்லாமல்.

அருவி வழியும் வேங்கடமலையில், பகைவரை அழிக்கும், சக்கரம், வெண்மையான சங்கும், கையில் தாமரை பூ, மார்பில் வைஜயந்தி மாலை என்ற ஆறம் பூண்ட கடவுள் என்று மிக மிக தெளிவாக விஷ்ணுகோயில் என்று சொல்கிறது.

11-ஆம் நூற்றாண்டில் இந்த கோவில் வைணவர் வசம் வந்த பின்தான், ராமானுஜர் அந்த கடவுள்சிலைக்கு வைஜயந்தி மாலை என்ற ஆரத்தை அணிவித்தார்,

அப்படி இருக்கும் போது இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த சிலப்பதிகாரத்தில், அதை பற்றி எப்படி எழுதினார்கள்    

சமண மதத்தை பரப்பவேண்டிய இளங்கோ என்ற ஒரு புலவர் ஒரு விஷ்ணு கோயிலை பற்றி இத்தனை தெளிவாக குறிப்பிடவேன்டிய காரணம் என்ன.? அதிலும் சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் என்று ஒரு சமண பெண் துறவி எப்போதும் வருவார்

இந்து மதத்தில் தீவிரமான கொள்கை உள்ள ஒரு எழுத்தாளர், நாகூரை பற்றி எழுத வேண்டிய தருணம் வந்தால் நிச்சயமாக, அங்கு ஒரு தர்கா இருக்கிறது, ஒரு சர்ச் இருக்கிறது என்று கூட எழுதமாட்டார், அவர் சொல்லவேண்டிய செய்தியை மட்டும் சொல்லிவிட்டு போவார். அது இயல்பான ஒரு செயல். அது போல சமண மதத்தை பரப்ப வேண்டிய ஒருவர் ஏன் ஓர் விஷ்ணு கோயிலை பற்றி சம்பந்தம் இல்லாமல் இவ்வளவு விளக்கம் கொடுக்க வேண்டும்

அப்படி என்றால் அது விஷ்ணு கோயில் என்று சிலப்பதிகார ஆசிரியர் கூறுகிறார் என்று ஒத்துகொள்ளத்தான் வேண்டுமா, அதை முடிவு செய்யும் முன் வேறு ஒரு சிலப்பதிகார பாடலை பார்ப்போம். இந்த பாடல் புகார் காண்டத்தில், நாடு காண் காதையில் 185-189ஆவது வரிகளில் வருகிறது

சினவரன் தேவன் சிவகதி நாயகன்
பரமன் குணவதன் பரத்திலொளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்...
சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருண்முனி


அருகதேவனின் சிறப்புகளை சொல்லும் இந்த பாடல், "அருகதேவன், என்பவர் சங்கரன், ஈசன், நான்முகன், எட்டுவகையான நல்ல குணமுடையவன்,  அவன்  ஒரு சுயம்பு வேதத்தை ஓதாமலே உணர்ந்தவன்,"  என்று சொல்கிறது


சிலப்பதிகாரம் சமண சமயத்தை பரப்பும் ஒரு நூல். உண்மையில் இளங்கோஅடிகளுக்கு சித்தம் கலங்கி இருந்தால் மட்டுமே இப்படி ஒரு வரிகளை எழுதியிருக்க முடியும்.

நாம் எங்காவது யாராவது இப்படி எழுதியதாக கேள்வி பட்டிருகிறோமா, ஏசு கிருஷ்ணனை போல நல்லவர். முகமது நபி முருகனை போல வீரமானவர், பிள்ளையார் புத்தரை போல அன்பானவர் என்று.

முதலில் ஒரு மதத்தை சேர்ந்த அதை பரப்பவேண்டிய கடமையில் உள்ள ஒருவர், தன் மத கடவுளை வேறு ஒரு மத கடவுளின் சிறப்புகளோடு ஒப்புமை படுத்தி எழுதுவாரா.

மேலே சொல்லப்பட்ட இந்த பாடல்கள்  அனைத்தும் சிலப்பதிகாரத்தில் பிற்கால சேர்கை,

இதை நாம் எப்படி தெரிந்த கொள்வது என்றால் சிலப்பதிகாரத்துக்கு முதலில் உரை எழுதிய இளம்பூரனார் சொல்வது என்னவென்றால் “அன் விகுதி அதாவது ஒருவரின் குணத்தை குறிக்கும் எதிர்கால தன்மை ஒருமை பெயர்களின் பயண்பாடு தன்னுடைய காலத்தில் ஏற்பட்டது என்றும் பழந்தமிழ் இலக்கியங்களில் அது கிடையாது என்கிறார்.

மேல உள்ள பாடலில் தான் எத்தனை “அன்”

வியாசர் எழுதியதாக சொல்லப்படும் மூல மகாபாரதம் வெறும் 18000 பாடல்கள் கொண்டது அது இன்று 1,00,000 பாடல்கள் ஆகிவிட்டது. அது போல தான் தமிழ் இலக்கியங்களும் பல பிற்சேர்க்கைகள் கொண்டது.

முதலில் சொன்ன தொல்காப்பிய வரிகளே சந்தேகத்திற்கு உட்பட்டது, ஏனெனில் அந்த வரிகள் தொல்காப்பியரால் எழுதப்பட்டது அல்ல. தொல்காப்பியர் காலத்தில் விந்திய மலைக்கு தெற்கில் உள்ள எல்லோரும் தமிழ் பேசியவர்களே. ஆனால் அந்த வரிகள் வேங்கடமலைக்கு தெற்கே உள்ளவர்கள் மட்டுமே தமிழ் பேசினார்கள் என்று சொல்கிறது. களப்பிரர் காலமும் அதற்கு முந்தைய காலத்திலும் விந்திய மலைக்கு தெற்கே உள்ள எல்லோரும் பேசிய மொழி தமிழ் தான், பிறகு எப்படி வடவேங்கிடதிற்கு தெற்கே மட்டும் தமிழ் கூறும் நல்லுலகம் ஆனது.

அந்த வரிகள் தொல்காபியத்திற்கு, பனம்பாரனார் என்ற புலவர் எழுதிய சிறப்பு பாயிரம் என்ற பாடல் (பாயிரம் என்றால் இன்றைய நூல் முன்னுரையை போன்றது) இந்த பாயிரம் எழுதும் வழக்கமே ஆழ்வார்கள் காலத்தில் வந்தது. தொல்காப்பியர் காலத்தில் பாயிரம் எழுதும் வழக்கம் கிடையாது.

மற்றும் ஒரு வேடிக்கை என்னவென்றால், தொல்காப்பியரின் நண்பர் என்று சொல்லப்படும் இந்த பனம்பாரனார் புறநானூற்று தொகுப்பில் 52 பாடல்கள் எழுதி உள்ளார் ஒன்றில் கூட அவர் வேங்கட மலை என்று ஒரு மலையை பற்றி கூட சொல்லவேயில்லை.

இதை நாம் கேட்டால், பார்பன தமிழ் அறிஞர்கள்,

  1. அந்த பனம்பாரனார் வேறு, இந்த பனம்பாரனார் வேறு,
  2. அந்த நக்கீரர் வேறு, இந்த நக்கீரர் வேறு,
  3. அந்த ஔவையார் வேறு, இந்த ஔவையார் வேறு,
என்று கதை விடுவார்கள். புலவர்கள் என்ன அரசர்களா முதலாம் நக்கீரர், இரண்டாம் நக்கீரர் என்று பெயர் வைத்து கொள்வதற்கு. எழுதும் பாடலே முழுக்க முழுக்க தனது சொந்த சிந்தனையாக இருக்க வேண்டும் என்று என்னும் புலவர்கள் ஏன் வேறு ஒரு புலவரின் பேரை வைத்து கொள்ளவேண்டும். கனக சுப்புரத்தினம் கூட பாரதிதாசன் என்று தான் வைத்து கொண்டார், இரண்டாம் பாரதி என்று வைத்து கொள்ளவில்லை.

தமிழ் இலக்கியத்தில் இளம்பூரனார், நச்சினார்கினியர் போன்ற உரை ஆசிரியர் காலத்தில் பல நூல்கள் தொகுக்கப்பட்டன,

பின்னர் குலோத்துங்க சோழன் காலத்தில் நம்பியாண்டார் நம்பியால் நூல்கள் தொகுக்கப்பட்டன,
இறுதியாக உ.வே.சாமிநாத ஐயரால் நூல்கள் தொகுக்கப்பட்டன.

இந்த தொகுத்தவர்கள் தங்கள் வசதிக்கு ஆங்காங்கே சில சேர்க்கைகளும், சில நீக்குதல்களும் செய்திருகிறார்கள்.

உதாரணமாக நம்பியாண்டார் நம்பி சைவ சமய நூல்களாக பன்னிரு திருமுறைகள் என்று 12 நூல்களை 12 ஆம் நூற்றாண்டில் தொகுத்தார் அதில் திருமுருகாற்றுப்படை என்பதும் ஒன்று.

ஆனால் பின்னாளில் உவே சாமிநாத ஐயர், திருமுருகாற்றுப்படை நூலை சங்ககால பத்துப்பாட்டு தொகுப்பில் சேர்த்து முருகன் வழிபாடு சங்ககாலத்திலே உண்டு என்று எல்லோரையும் நம்ப வைத்து விட்டார்.

பத்துப்பாட்டில் எந்த நல்ல தமிழ் நூலை தூக்கி எரிந்து விட்டு திருமுருகாற்றுப்படையை சேர்த்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் அதில் இந்து மத பெருமை சேர்க்க இயலாது, என்று கடைசிவரை அதை அச்சில் ஏற்றாத நல்லவர் தான் தமிழ் தாத்தா உவே சாமிநாத ஐயர்.

இந்த இரண்டாம் பகுதியல் நாம் பார்த்த வரை, ராமானுஜர் காலத்துக்கு முற்பட்ட இலக்கியங்களில்:

  1. சமஸ்கிருத இலக்கியங்களில் வேங்கடமலை விஷ்ணு கோயில் என்று எங்கும் சொல்லப் படவில்லை
  2. தமிழில் இரண்டு இடத்தில் மட்டுமே சொல்லப்படுகிறது அவைகளும் பல விதமான உள்நோக்கங்களோடு சேர்க்கப் பட்டிருக்கவேண்டுமே தவிர, அவை அந்த இடங்களில் இயல்பாக இல்லை

இதற்கு மேல் வெளிநாட்டு பயணிகளான யுவாங் சாங், இலங்கையில் இருந்து இங்கு வந்தவர்கள், கல்வெட்டுகள் போன்ற வரலாற்று குறிப்புகளை அடுத்த மூன்றாவது பகுதியில் பார்ப்போம்

உபரி தகவல்:
சிலப்பதிகாரம் இளங்கோ அடிகள் தனியாக அமர்ந்து யோசித்து எழுதிய கதை அல்ல சங்க காலத்தில் செவிவழி செய்தியாக சொல்லப்பட்ட ஒரு சிறு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பெரும் காப்பியமாக அவர் எழுதினர். இந்த கருத்தை ஏற்கமுடியாதவர்கள்

நற்றிணை தொகுப்பில் உள்ள 216ஆவது பாடலை பார்க்கவும், அந்த பாடல் மதுரை மருதனிளநாகனார் எழுதியது வரிகள் கீழே......
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையர் ஆயினும்,
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே.

இந்த வரிகளின் பொருள்

ஏதிலாளன் செயலாலே கவலையுற்ற திருமாவுண்ணி என்பாள் ஒரு பரத்தை, அவள் தான் காதலித்த தலைவன் தன்னைக் கைவிட்ட காரணத்தாலே தனது ஒரு முலையை அறுத்துக்கொண்டனள், ஆனாலும் அவளது  அச்செயல் கேட்ட எல்லோரும் அவளுக்காக மணம் இறங்கினர் ஆனால்  உண்மையாக வருந்தினாரிலர் அதுபோலவே, என் வருத்தத்தைக் கேட்டவரெல்லாம் அத் திருமாவுண்ணியின் வருத்தம் கேட்டவர் போல ஓரளவு இரங்குவாரே ஆனாலும் முழுமையாக வருந்துபவரல்லர். அன்புடையோர் மட்டுமே வருந்துவர். என்மீது என் தலைவன் அன்பிலன் ஆகிவிட்டான், அதனால்   அவன்கூட என்னிலை கேட்டு வருந்துவானல்லன் போலும் எனப் புலம்பினாள்  தலைவி

மதுரை மருதனிளநாகனார் சிலப்பதிகார காலத்துக்கு முந்தியவர் எனவே தலைவனின் பிரிவினால் முலையை அறுத்துக்கொண்ட திருமாவுண்ணி என்று பாத்திரமே பின்னாளில்  கண்ணகி பாத்திரத்துக்கு உந்து சக்தியாக இருந்திருக்கவேண்டும்

No comments:

Post a Comment

Book Wrapper

இந்த நூலை  வாங்க  விரும்பினால்  இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்     விலை ரூ.200 மட்டுமே