Monday, July 24, 2017

இந்து அறநிலையத்துறை – மற்றும் ஒரு பார்பன புரட்டு



சென்னையில் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் (உத்தமர் காந்தி சாலை) கடந்து செல்லும் போது எல்லோரும் மேலே படத்தில் உள்ள கட்டிடத்தை பார்த்திருப்பீர்கள்.
பொதுவாக இந்த துறையை பற்றி திட்டாத இந்துக்களே தமிழ் நாட்டில் கிடையாது,
இந்த திராவிட இயங்கங்களை பார்த்தீர்களா எல்லா இந்து கோயில்களையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்துகொண்டு, கோடிக்கணக்கில் வசூலாகும் இந்துகளின் பணத்தை அரசாங்கத்தின் மூலம் கொள்ளை அடிகிறார்கள். இவர்களுக்கு தைரியம் இருந்தால் சர்சுகளையும், மசூதிகளையும் அரசு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டியது தானே, என்பது தான் இவர்களால் முக்கியமாக வைக்கப்படும் குற்றச்சாட்டு.
மற்றும் ஒரு பார்பன புரட்டு என்று தலைப்பில் சொல்லியிருக்கிறதே, இந்த இந்து அறநிலையத்துறை என்பதே திராவிட இயக்கங்களின் திருட்டுத்தனம் என்று எல்லோரும் சொல்லும் போது இங்கே பார்பன புரட்டு எங்கே இருந்தது வந்தது என்று நீங்கள் கேட்கலாம்
இந்து அறநிலையத்துறையின் உண்மையான வேலை என்ன இதில் பார்பன புரட்டு எப்படி வந்தது என்பதே இந்த கட்டுரை.
மக்கள் வைக்கும் முதல் குற்றச்சாட்டு,
சர்சுகளையும், மசூதிகளையும் அரசு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டியது தானே என்பது, அரசாங்கம் அவைகளை ஏன் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கவில்லை என்றால், சர்ச்சுகளை கட்டுப்படுத்த அவர்களிடம் CSI, Diocese Arch Bishop என்று அவர்களிடம் ஒவ்வொரு பிரிவுக்கு, பல சட்ட திட்டங்களுடன் கூடிய அமைப்புகள் உள்ளன, மசூதிகளையும் இதே போல கட்டுப்படுத்த Waqf Board என்ற அமைப்பு, பல சட்ட திட்டங்களுடன் உள்ளது, எந்த சர்ச்சிலும், மசூதியிலும், கலெக்ஷனை அந்த பாதிரியாரோ, மவுல்வியோ வீட்டுக்கு கொண்டு செல்ல முடியாது. தினசரி வசூல் உரிய சாட்சிகளின் முன் சரி பார்க்கப் பட்டு கணக்கில் எழுத்தப்படும்
இந்த எல்லா அமைப்புகளும் இந்திய அரசாங்கத்தின் ட்ரஸ்ட்-களின் சட்டவிதிமுறைகளின் கீழே வருகிறது.
எனவே அரசாங்கம் தைரியம் இல்லை என்பதால் சர்சுகளையும், மசூதிகளையும் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவராமல் இருக்கவில்லை, அங்கே செயல்பாடுகள் விதிமுறைக்கு உட்பட்டு இருப்பதால் மேற்கொண்டு எதுவும் செய்ய தேவையில்லை என்றுதான் விட்டுவிட்டது.
மக்கள் வைக்கும் இரண்டாம் குற்றச்சாட்டு,
திராவிட இயங்கங்கள் எல்லா இந்து கோயில்களையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்துகொண்டது. இதுவும் உண்மையில்லை
இந்து கோயில்கள் மட்டுமே பல நூறு வருடங்களாக எந்த வித கட்டுபாடுகளும் இல்லாமல், கோயில் பூசாரிகளான பார்பனரும், தர்மகர்த்தாவாக இருக்கும் உயர் சாதி இந்துக்களாலும், அந்த கோயில்களின் சொத்துகளை கணக்கு வழக்கின்றி கொள்ளை அடித்துகொண்டிருந்தது.
1925-ல் முதல் முதலில் ஆங்கிலேயர் காலத்தில், நீதிக்கட்சியின் சார்பாக பனகல் அரசர் சர். பிட்டி. தியாகராசர் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த போது, ஆங்கிலேய கவர்னரின் மூலம் முதல் முதலில் Madras Hindu Religious Endowments Act 1925. கொண்டு வரப்பட்டது.
அதெல்லாம் தெரியும் இப்போது உள்ள சட்டத்தை கொண்டுவந்தது கருனாநிதி தானே என்று உடனே சொல்ல நினைப்பவர்களுக்கு, சொல்வது, சற்று பொறுங்கள்.
இப்போது உள்ள இந்து அறநிலையத்துறையை கட்டுப்படுத்தும் சட்டம், பெரியாரின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 1959-ல், Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act XXII of 1959 என்ற சட்டமாக முதலமைச்சர் காமராஜர் ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.
பிறகு 1991-ல் முதலமைச்சர் கருணாநிதியின் காலத்தில், இந்த சட்டத்தில் மேலும் பல மாற்றங்கள் செய்து, பார்பனரின் கோயில் கொள்ளையை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நீங்கள் உங்கள் பகுதியில் பல பால் மற்றும் விவசாய கூட்டுறவு சொசைட்டிகளை பார்த்திருக்கலாம், அவைகளை அந்த தேர்ந்தெடுத்த தலைவர் மற்றும் செயலாளர் போன்றவர்கள் சரிவர செயல்படுகிறார்களா என்று மேற்பார்வை செய்ய தமிழ் நாட்டு அரசு கூட்டுறவு துறையிலிருந்து சிறப்பு அலுவலர்கள் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.
இந்து அறநிலையத்துறையின் பணியும் அதே தான்,
இந்து கோயில்கள் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படவில்லை, கண்காணிப்பின் கீழ்கொண்டு வரப்பட்டுள்ளது
அவைகளை கட்டுப்படுத்த எந்த அமைப்பும் இல்லை என்பதால் பூசாரிகள் கோயிலை கொள்ளை அடிக்கும் வேலையை தடுக்க தான் இந்து அறநிலையத்துறை வேலை செய்கிறது..
இந்து அறநிலையத்துறையின் வேலை,
1. மிக மிக கூட்டமான கோயில்களில் பூசாரிகள் கன்னாபின்னாவென்று பக்தர்களிடம் பணம் வசூல் செய்து, பின்பக்கமாக உள்ளே அழைத்து செல்வதை தடுப்பது
2. முறையாக டிக்கட் மூலம், சிறப்பு தரிசனம் போன்ற ஏற்பாடுகள் செய்வது,
3. கோயில் உண்டியல், முதல் இந்த சிறப்பு தரிசன டிக்கட்டுகள், கோயிலை சுற்றி உள்ள கடைகளின் முறையான வாடகை வசூல், பின் இந்த பணங்கள் கோயில் பெயரில் உள்ள வங்கி கணக்கில் முறையாக செலுத்தப்படுகிறதா என்று கண்காணிப்பது,
4. கோயில் செலவுகள் உண்மையில் சரியாக செய்யப்படுகிறதா, அல்லது கணக்கு புத்தகங்களில் மட்டுமே எழுதப்படுகிறதா என்று கண்காணிப்பது,
5. கோயிலுக்கு நிலங்கள் சொத்துகள் இருந்ததால் அந்த குத்தகை, வாடகை பணங்கள் சரியாக வசூல் செய்யப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டதா என்று கண்காணிப்பது,
இவை போன்றவை தான் இத்துறையின் வேலை,
சுருக்கமாக சொன்னால் இத்த துறை இல்லையென்றால்,
ஒரு உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் என்றால் மைலாப்பூர் கபாலி கோயில் பூசாரிகள் ஒவ்வொருவரும், இந்நேரம் மகாபலிபுரத்தில் சொந்தமா ஒரு பீச் ரிசார்ட் மற்றும் தலா 3 BMW கார் வைத்திருப்பார்கள்.
இந்து அறநிலையத்துறையின் வேலை, கோயில் வசூல் பணத்தை கொண்டு வந்து அரசாங்க கஜானாவில் சேர்ப்பது அல்ல.
மாறாக அரசு கஜானாவில் இருந்து மக்கள் வரிப் பணத்தில் தான் அறநிலையத்துறை இயங்கிறது, இத்துறை சார்ந்த அனைத்து ஊழியருக்கும் சம்பளம் அரசு வரிப்பணத்தில் தான் கொடுக்கப்படுகிறது.
கோயில் பணத்திலிருந்து பூசாரிகளுக்கு தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது, இந்து அறநிலையத்துறை சார்ந்த எந்த ஒரு கடைநிலை ஊழியருக்கு கூட கோயில் பணத்தில் சம்பளம் கொடுப்பது இல்லை
இந்து அறநிலையத்துறை, இந்து கோயில்களை கூட்டுறவு சொசைட்டிகளை போல கணக்கில் கொண்டு கண்காணிக்கும் அமைப்பு மட்டுமே கோயில் வசூலை அரசாங்கத்தில் சேர்க்கும் அமைப்பு அல்ல.
தமிழ் நாட்டில் பலர் இன்னமும் கோயிலில் வசூலாகும் கோடிக்கணக்கான பணம் தமிழக அரசுக்கு வந்து விடுகிறது என்று தவறாக தான் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
இங்கு பார்பன புரட்டு பற்றி சொல்ல 1980-ல் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி சொல்ல வேண்டும்
எம்ஜியார் ஆட்சிகாலத்தில், 1980-ல் திருசெந்தூர் வைரவேல் வழக்கு என்று ஒண்டு உண்டு. இளையதலைமுறை நண்பர்களில் பலருக்கு அது தெரிந்திருக்காது.
1980ஆம் ஆண்டு, திருசெந்தூர் கோயிலில் உண்டியல் திறந்து பணம் எண்ணும் வேலை முடிந்து கணக்குகளை கோயில் நிர்வாகம் வெளியிட்டது, ஒரு பக்தர் தான் ஒரு வைரவேலை உண்டியலில் போட்டத்தாகவும் அது கோயில் வெளியிட்ட கணக்கில் வரவில்லை என்று ஒரு பத்திரிகையில் பேட்டி கொடுத்தார்.
அப்போது, திருசெந்தூர் கோயிலில், இந்து அறநிலையத்துறை கண்காணிப்பு பணியில், துணை ஆணையராக இருந்தவர் சுப்பிரமணிய பிள்ளை,
அவர் இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்து விசாரணை மேற்கொள்ளதொடங்கினார்,
மறுநாள் கோயிலில் உள்ள துணை ஆணையர் மாளிகையில் சுப்பிரமணிய பிள்ளை தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
துணை ஆணையரின் மர்மமான மரணத்தை பற்றிய, காவல் துறை விசாரணையில் பூசாரிகளும், தர்மகர்த்தாவும் அளித்த சாட்சி என்னவென்றால்,
உண்டியல் பணம் எண்ணும் போது துணை ஆணையர் அவரது வேட்டி மடிப்பில் ரூபாய் 2850 உண்டியல் பணத்தை ஒளித்து வைத்திருந்தார், அதை பார்த்த நாங்கள் திருப்பி தரும்படி கேட்டோம்,
அவரும் கொடுத்துவிட்டார் ஆனால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் என்பது தான்
துணை ஆணையரின் மகன், ஜனாதிபதி வரை மனு கொடுத்து, பின்னர் C.R. Paul Inquiry Commission என்ற பெயரில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது,
சுப்பிரமணிய பிள்ளை நெல்லை கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 700 கோயில்களில் கண்காணிப்பு அதிகாரியாக, இந்து அறநிலையத்துறை சார்பில் வேலை செய்தவர்,
சட்டை கூட போடாமல் வெறும் வேட்டி அணிந்து கொண்டு உண்டியல் எண்ணும் பணியை செய்யும் போது, அங்கு சாட்சியாக இருந்த அத்தனை வங்கி அதிகாரிகளின் முன்னிலையில் சுப்பிரமணிய பிள்ளை ரூபாய் 2850-ஐ திருடியிருக்க வாய்ப்பே இல்லை என்று பல்வேறு விசாரணைக்கு பின் அந்த கமிஷன் தன் அறிக்கையை முடித்து கொண்டது,
அவரது மரணத்தை பற்றியும் காணமல் போனதாக சொல்லப்பட்ட அந்த வைரவேல் பற்றியும் சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று பரிந்துதுரை செய்ததது.
இன்று வரை சுப்பிரமணிய பிள்ளை மரணம் எப்படி என்றோ வைரவேல் எங்கே போனது என்றோ கண்டுபிடிக்க படவில்லை.
அது தான் பார்பன புரட்டு
இப்போது உங்களுடன் மேலும் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
1. இந்து அறநிலையத்துறையால் தங்கள் வசதிக்கு திருடமுடியாது கஷ்டப்படும் ஒரே கூட்டம் பார்பனர் மட்டுமே.
2. இந்த துறையை கொண்டு வர பெரிதும் போராடியது பெரியாரும் திராவிட இயக்கமும்.
3. எம்ஜியார் மயக்கத்தில் இருக்கும் மக்களிடம் கருணாநிதி மீது எந்த பழி சொன்னாலும் ஏற்றுகொள்வார்கள்
4. கருணாநிதி நாத்திகவாதி அதனால் அவர் இந்து கோயிலுக்கு எதிராக செயல் பட்டார் என்று சொன்னால் மக்கள் நம்புவார்கள்
5. தமிழில் வெளிவரும் அனைத்து நாழிதழ்களிலும் வேலை செய்வோர் 98% பார்பனர் மட்டுமே (உனக்கு எப்படி தெரியும் என்றால் பத்து வருடங்கள் நானே மீடியாவில் பணிபுரிந்துள்ளேன்)
6. நாம் பெரும்பாலும் பத்திரிக்கைகளை வைத்து தான் செய்தி அறிகிறோம், அதில் சொல்வதை பொதுமக்கள் எப்படியும் ஏற்றுகொள்வார்கள்
8. தைரியம் இருந்தால் சர்சுகளையும், மசூதிகளையும் அரசு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டியது தானே, என்று மதவாத சிந்தனையை தூண்டுவது
இப்படியாக பார்பனர் கோயில் பணத்தை கொள்ளை
அடிப்பதை தடுக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு துறையை பற்றி,
நம் தமிழ் நாட்டில் பலர் இன்னமும் கோயிலில் வசூலாகும் கோடிக்கணக்கான பணம் தமிழக அரசுக்கு தான் வந்து விடுகிறது என்று தவறாக பொதுமக்களின் மண்டையில் ஏற்றியது தான் உண்மையான பார்பன புரட்டு.
பல வருடமாக இந்து அறநிலையத்துறை பற்றி இல்லாத ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பார்பனர் சொல்லிவருகின்றனர், மக்களும் அறியாமல் நம்பி வருகின்றனர்.
இன்னும் போதாகுறைக்கு இந்தத்துறையில் கோயில் நிர்வாக அதிகாரி பணிக்கு, இந்துவாக பிறந்த யாரும் பட்டப்படிப்பு முடித்து ஒவ்வொரு வருடமும் TNPSC Group VII தேர்வு எழுதி வெற்றிபெற்றால் தமிழக அரசின் 69% இடஒதுக்கீட்டின் படி இந்த பணியில் அமரலாம், பார்பன பூசாரிகள் அந்த அதிகாரி எந்த சாதியாக இருந்தாலும் அவருக்கு கைகட்டி பதில் சொல்லி ஆகவேண்டும் என்பது தான் பார்பனருக்கு இன்னமும் எரிச்சல்.
இன்னமும் நம்பிக்கை இல்லையென்றால், இந்து அறநிலையத்துறை அலுவலகத்துக்கு பத்து ரூபாய் பணம் கட்டி RTI-சட்டத்தின் கீழ் இந்த வருடம் உங்கள் துறையின், நிகர லாபம் என்ன என்று கேட்டு மனு அனுப்புங்கள்
அங்கிருந்து, இத்துறை ஒரு கண்காணிப்பு துறை இங்கு லாபம் என்று எல்லாம் எதுவும் கிடையாது என்று பதில் வரும்.
இதையெல்லாம் தாண்டி அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, இனி இந்த துறை மூலம் பயிற்சி கொடுக்கப்பட்டு, சாதி வித்தியாசம் இல்லாமல் இறை பணி செய்ய விரும்பும் யார் வேண்டுமானாலும், அதாவது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டுவந்தது தான் பார்பானின் வெறி உச்சிக்கு ஏரிய தருணம்
இன்னும் ஒன்றை சொல்லவேண்டும் என்றால், கிருஸ்துவ, இஸ்லாமிய மற்றும் பிற மதத்தினர் செலுத்தும் வரிப்பணத்தில் இந்து கோயில் சொத்துகள் பாதுகாக்கப் படுகிறது. வெறும் இந்துகளின் பணத்தில் மட்டுமே அல்ல.
உண்மை இப்படி இருக்க, திராவிட கட்சிகள் கோயில் பணத்தை அரசாங்கத்தின் மூலம் கொள்ளை அடிப்பது போன்ற எண்ணத்தை பொதுமக்கள் மனதில் ஏற்றியது தான் உண்மையான பார்பன புரட்டு.
இன்றும் Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act XXII of 1959 சட்டத்தின் படி யார் வேண்டுமானாலும் ஒரு தனிப்பட்ட இந்து வழிபாட்டு மையத்தை தொடங்கலாம் நடத்தலாம்
ஆனால் அங்கே உண்டியல் வைத்தாலோ, டிக்கட் மூலம் அர்ச்சனை, சிறப்பு நுழைவு கட்டணம் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்தால், அது பொதுமக்களுக்கு சொந்தமான கோயில் என்று கணக்கில் கொண்டுவரப்பட்டு, இந்து அறநிலையத்துறை கண்காணிப்பில் (கட்டுப்பாட்டில் அல்ல) வந்துவிடும்
இதனால் தான் பார்பான் தன் விஷ வன்மத்தை கருணாநிதி மேலும் திராவிட இயங்கங்கள் மேலும் பரப்பிகொண்டே இருக்கிறார்கள் .
அவ்வை சன்முகியில், வருவது போல சொல்லவேண்டுமென்றால், இந்த துறையும் திராவிட இயக்கங்களும் இருப்பதால் சேதுராமையர் போன்றவர்களால் கவுஸிமாமி கூட சேர்ந்துகிட்டு வெள்ளி குத்து விளக்கு திருட முடியவில்லை
அதனால் தான் இந்த கூப்பாடு


Saturday, July 22, 2017

இசக்கியம்மன் கதை - உலகின் எல்லா கடவுள் கதைகளின் மூலக்கதை

இசக்கியம்மன் கதை  - உலகின் எல்லா கடவுள் கதைகளின் மூலக்கதை 
இன்று உங்களுக்கு 4 புராணகதைகள் சொல்கிறேன், பின்னர் இறுதியில் ஒரு கற்பனைக்கு எட்டாத ஒரு வரலாற்று தகவலை தருகிறேன். அதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ளமுடிகிறது என்று பாப்போம்.
இந்த புராண கதைகள் இந்துமததிற்கு சம்பந்தமில்லா கதைகள். சுமார் கிமு 3000 முதல் கிபி முதலாம் நூற்றாண்டில் சொல்லப்பட்ட கதைகள்.
எப்போது பார்த்தாலும் தமிழ் நாட்டில் எல்லாமே புத்தமதம் சமணமதம் தானா, என பல நண்பர்கள் சலித்து கொள்கின்றனர், அந்த நண்பர்களுக்கான சிறப்பு பதிவே இது.
ஆனால் மறுபடியும் சொல்கிறேன், இது தமிழர் சிறப்பு பற்றிய பதிவு, மறந்தும் இந்து மத சிறப்பு பற்றிய பதிவு என்று நினைத்து விடாதீர்கள்.
முதல் கதை தமிழ் நாட்டு கதை, இரண்டாம் கதை எகிப்து நாட்டு கதை, மூன்றாம் கதை கிரேக்க நாட்டு கதை, நான்காம் கதை ரோமபுரி நாட்டு கதை.
இந்த கதைகளின் வரிசை, அவை உருவான காலகட்டத்தின் வரிசையிலேயே சொல்கிறேன்.
எல்லா கதைகளும் முடிந்தவரை, கதையின் முக்கிய கருவை சுருக்கமாகவே சொல்லப்பட்டிருக்கும், முழுகதைகளின் பல்வேறு வடிவங்கள் தேவை படுவோர், கூகிள் ஆண்டவர் துணையுடன் இணையத்தில் தேடி படித்து கொள்ளலாம்
முதல் கதை – தமிழ்நாட்டு கதை
பழங்காலத்தில், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் தற்போதைய, குமரி பகுதியில் இசக்கி என்று ஓரு பெண் தன கணவனுடன் வாழ்ந்து வாழ்ந்து வந்தாள் அவளோடு அவள் தங்கையும் வாழ்ந்து வந்தாள். அப்போது அதே ஊரை சேர்ந்த ஒரு செல்வம் படைத்த ஒரு வணிகன் எப்படியாவது அவளை அடைந்துவிட வேண்டும் என்று அவளை பலவாறு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தான்.
இறுதியாக அவள் அந்த வணிகனிடம் என் கணவரை தவிர வேறு யாரையும் என்னால் நினைத்து பார்க்க கூட முடியாது என்று சொல்லிவிட, அந்த வணிகன் தன் ஆட்களை ஏவி அவள் கணவனை கொன்று விடுகிறான், அந்த நேரத்தில் அவள் கர்ப்பமாக வேறு இருக்கிறாள்
தன் கணவன் இறந்த துக்கம் தாளாமல், நெருப்பை மூட்டி அதில் பாய்ந்து உயிர் விட முயல்கிறாள்,
ஆனால் அதே நேரத்தில் அவளுக்கு அவள் வயிற்றில் இருந்த ஆண் குழந்தை பிறந்துவிடுகிறது.
ஆதரிக்க யாரும் இல்லாத நிலையில் அவள் ஊருக்கு வெளியே தன மகனுடன் வாழ்ந்து வருகிறாள், அந்த மகன் மாடுகள் மேய்த்து வந்தாலும் சுடுகாட்டுக்கு அருகிலேயே சுற்றி திரிந்தாலும், அவனுக்கு என்று எந்த பெரும் இல்லை என்பதாலும் அவனை சுடலைமாடன் என்று அழைத்துவந்தனர்.
இசக்கியின் மகன் வளர்ந்த பின்னும் அந்த வணிகன் அவளுக்கும் அவள் தங்கைக்கும் தொல்லை கொடுத்துகொண்டே இருந்தான், பல முறை சுடலைமாடனை கொல்ல திட்டம் தீட்டினான், அந்த திட்டங்களிலிருந்து எல்லாம் தப்பித்த சுடலைமாடன் கோபம் கொண்டு, அந்த வணிகனை ஒருநாள் தந்திரமாக சுடுகாட்டுக்கு அருகில் வரவைத்து கொன்றுவிடுகிறான்.
அதுவரை அந்த செல்வந்த வணிகனின் அட்டகாசத்திற்கு பயந்து வாழ்ந்த அவ்வூரின் மக்கள் இசக்கியையும் அவள் மகன் சுடலை மாடனையும் தங்கள் காவல் தெய்வமாக கருதி வணங்கி வந்தனர்.
முதல் கதை – பின்குறிப்பு
இது இந்த கதையின் முதல் வடிவம், இதற்கு சான்றுகள் எது என்று பின்னர் நேரம் இருக்கும் போது சேர்கிறேன். நிச்சயமாக சான்றுகள் இருக்கிறது. மேலும் இதே கதை, இசக்கிக்கு பதில் பேச்சியம்மன், பேராச்சியம்மன், பழையனூர் நீலி போன்ற பெயர்களிலும், சுடலைமாடனுக்கு பதில் அய்யனார், கருப்பசாமி, முனிசாமி போன்ற பெயர்களிலும், செல்வந்த வணிகனுக்கு பதில், ஒரு மதுரை பாண்டிய மன்னன், ஒரு செட்டியார், ஒரு பார்பனன் போன்ற பெயர்களிலும் பல வடிவங்களில் கதையாக தற்போதைய காலங்களில் சொல்லப்படுகிறது

இரண்டாம் கதை – எகிப்து நாட்டு கதை
எகிப்து நாட்டை பாரோ மன்னர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் ஆண்டுவந்தனர் அதில் ஒரு மன்னனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர், முதல் மகனின் பெயர் ஓசிரிஸ் அடுத்தவன் பெயர் சேத்.
ஓசிரிஸ் தன் தந்தை இறந்த பின் தன் தங்கை இஸிஸ் என்பவளை மணந்து கொண்டு அரசனானான்
எகிப்த்தில் வெளியே யாரும் திருமணம் செய்யமாட்டார்கள், மனைவி இறந்தால் மகளை, கணவன் இறந்தால் மகனை, இரண்டும் இல்லையென்றால் அக்கா தங்கை இப்படிதான் திருமணம் செய்வார்கள். ஏன் என்றால் பாரோக்கள் சூரியகடவுளான ரா-வின் நேரடியான வாரிசுகள், வேறு யாரையும் திருமணம் செய்தால் அந்த கடவுளின் சுத்த ரத்தம் அசுத்தம் ஆகிவிடும் என்பதால் வேறு யாரையும் திருமணம் செய்யமாட்டார்கள்.
அண்ணன் ஓசிரிஸ் மேல் பொறாமை கொண்ட சேத் ஒருநாள் அவனை கொன்று விடுகிறான், இறந்த அவன் உடலை தூக்கிக்கொண்டு, சென்ற இஸிஸ் யாரும் இல்லாத காட்டு பகுதியில் அந்த உடலை எரித்து, தான் ஒரு கழுகாக உருமாறி அந்த புகையின் மேலே பறக்கிறாள், பறந்து கொண்டே தன் கணவனின் நெருப்பில் உள்ள புகையை உள்வாங்கி கர்ப்பம் ஆகிறாள்.
அந்த கற்பத்தின் மூலம் அவளுக்கு பிறந்த குழந்தைக்கு ஹோரஸ் என்று பெயர் வைக்கிறாள். ஹோரஸ் வளர்ந்து தன் சித்தப்பா சேத்தை எதிர்க்கிறான். சேத் ஹோரஸ்-ஐ கைது செய்து சிலுவை போன்ற ஒரு மரக்கட்டையில் ஆணியால் அடித்து கொல்கிறான்.
ஹோரஸ்-ன் தந்தை ஓசிரிஸ்-ன் ஆவி இறந்த மகனின் உடலில் புகுந்து வந்து,உயிர்தெழுந்து வந்து, தன் தம்பி சேத்-ஐ கொன்று தன் மனைவி இஸிஸ்-உடன் சேர்ந்து அரசனாகி, தன் மகனின் உடலோடே இருந்து எகிப்தை நல்லாட்சி செய்கிறான்
மூன்றாம் கதை - கிரேக்க நாட்டு கதை

சுமார் கிமு 2000-ல் கிரேக்கத்தில் பல சிறு சிறு மன்னர்கள் ஆண்டு வந்தார்கள், அதில் ஒரு மன்னனின் பெயர் ஆம்பிட்டிரியான் அவனுக்கு ஹீரா என்று உலக அழகி போல ஒரு மனைவி இருந்தாள்.
அந்த ஹீரா மீது காதல் கொண்ட ஜூயஸ் என்ற கிரேக்க கடவுள் ஆம்பிட்டிரியான் இல்லாத நேரத்தில் ஆவலுடன் வந்து அவளுடன் உறவு கொண்டு, அதன் மூலம் ஒரு மகன் பிறக்கிறான். அவனுக்கு அல்சிடீஸ் என்று பெயர் வைக்கின்றனர். பின்னாளில் அவனே ஹேர்கூலீஸ் என்று பெயர் பெறுகிறான் (ஹீராவின் மகன் என்ற அர்த்தத்தில்). பின் அரசனுக்கும் அரசிக்கும் இரண்டாவதாக ஒரு மகன் பிறக்கிறான் அவன் பெயர் இபிகிலேஸ்.
அரசன் ஆம்பிட்டிரியான் ஒரு கொடுங்கொலானாக இருக்கிறான். அரசியின் அந்தரங்க கதையை எப்படியோ தெரிந்து கொண்டு தனக்கு பிறந்த இபிகிலேஸ்-யை அரசனாக்க முயல்கிறான், அந்த முயற்சியில் தன் மனைவி ஹீரவையும் கொல்கிறான்.
ஹேர்கூலீஸ்-ஐ அரசன் இரும்பு சங்கிலிகளில் பிணைத்து சிறையில் அடைத்து வைக்கிறான். அங்கே அவனை சாகும் அளவுக்கு சித்ரவதை செய்கிறான். அந்த சிறையை உடைத்து கொண்டு மறுபடியும் உயிருடன் வந்த ஹேர்கூலீஸ் தந்தை மற்றும் தம்பியை கொன்று ஆட்சியை பிடித்து நல்ல முறையில் வாழ்கிறான்.
மூன்றாம் கதை – பின்குறிப்பு
இந்த கதையை தான் பின்னாளில் சேக்ஸ்பியர் எழுதி அதே கதையை பம்மல் கே சம்பந்தர் மாற்றி தமிழில் எழுதி,
அதை திரைப்படமாக மாற்றிய போது திரைகதை வசனம் கலைஞர் எழுதிய
மனோகரா திரைப்படத்தின் மூல கதை.
நான்காம் கதை ரோமபுரி நாட்டு கதை

இந்த நாலாம்கதை பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. இது நாம் எல்லோரும் அறிந்த ஏசுநாதர் கதை தான். இதே போல அப்பா இல்லாமல் ஒரு கன்னி பெண்ணுக்கு தெய்வ அம்சத்துடன் பிறந்த குழந்தை. கெட்டவர்களை அழித்து நல்லவர் பக்கம் இருந்து காக்கும் கடவுளின் குழந்தை.
ஒரே ஒரு வித்தியாசம் கெட்டவர்களை அழிக்க அவர்களை கொல்லாமல் தான் இறந்து மறுபடியும் பிறப்பதாக சொல்லப்பட்ட கதை ஏசுவின் கதை, இதை பற்றி அதிகம் விளக்கம் சொல்லி உங்கள் பொறுமையை சோதிக்க நான் விரும்பவில்லை
எல்லா கதைகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு பின்குறிப்பு
இதில் சொல்லப்பட்டுள்ள பல கருத்துகளுக்கு கண்டிப்பாக முழுக்க முழுக்க சான்றுகள் என்னால் காட்ட முடியாது.
ஆனால் இதில் சொன்ன கருத்துகளுக்கு வாதம் செய்யும் வகையில் யாரும் வந்தால் நான் பதில் சொல்ல தயார். ஆனால் விதண்டாவாதம் செய்ய வந்தால் உங்கள் கமெண்டுக்கு பதில் சொல்ல மாட்டேன்.
நாலு புராண கதைகள் சொல்லிவிட்டீர்கள்,
ஒரு கற்பனைக்கு எட்டாத ஒரு வரலாற்று தகவலை தருகிறேன், என்று சொன்னீர்களே அது என்ன என்று கேட்டால்.
இதே எகிப்திய பாரோ அரசர்கள் காலத்தில் இன்றைய அரேபிய பிரதேசத்தில் சுமேரியன் நாகரீகம் என்று ஒன்றும் இருந்தது. அவர்களின் புராண கதை சரிவர யாருக்குக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது.
ஆனால், அந்த பாபிலோனிய அரசர்களும் அனுனாகி என்ற பெண்தெய்வத்தை வழிபட்டுயிருகிறார்கள். 
அதில் முக்கியமான கருத்து என்னவென்றால் பாபிலோனிய அரசர்களும் கையில் குழந்தையுடன் இருக்கும் பெண்தெய்வத்தை வழிபட்டுயிருகிறார்கள்
அதில் மேலும் முக்கியம் என்னவென்றால் அங்கு ஒரு அரசனின் பெயரே இசக்கி பால் என்பதே
அவன் வம்சத்தில் 11 அரசர்கள் அவர்கள் பெயர்கள் பின்வருமாறு
  1. இழிமான் 
  2. இதிலி 
  3. தமிழி
  4. இசக்கி வாழ் 
  5. சுசி
  6. குழுகி
  7. பேசுங்காள்
  8. ஆதரன்
  9. ஏகுரல்
  10. மேலம்மன்
  11. ஏகன்

இந்த பெயர்கள் பற்றி அதிகம் தகவல் வேண்டுவோர் கீழே உள்ள சுட்டியை பார்க்கவும்
இதையும் தாண்டி இந்த அரசர்களின் வம்சத்தின் பெயரே கடலாடி பரம்பரை, (Sealand Dynasty) சங்க காலத்தில் கடல் தமிழகத்தை அழித்த போது 3000 ஆண்டுகளுக்கு முன் கடல் வழியாக அங்கே சென்றவராக இருக்க கூடும்
இதையெல்லாம் தாண்டி அந்த சுமேரிய மன்னர்களின் தலை நகரத்தின் பெயர் அவர்களின் மொழியில்

“ஊர்:

என்றே அழைக்கப்பட்டது.
மேலும் எகிப்து நாட்டில், சுமேரிய நாட்டில் தமிழ் எழுத்துகளுடன் உள்ள மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன
தமிழ் நாட்டில், எகிப்து, சுமேரிய நாட்டு எழுத்துகளுடன் உள்ள மண்பாண்டங்கள் கண்டறியப் படவில்லை
ஆக இந்த கதைகள் மொத்தத்தில் தமிழகத்தில் இருந்த இசக்கி என்ற ஒரு தமிழ் பெண்ணின் தனிப்பட்ட சோகம். இன்று உலகம் முழுவதும் தாய் தெய்வவழிபாடு என்று மாறி, அதன் மூலம் பல பெயர்களில் கடவுள்கள் தோன்ற காரணம் என்பதே எனது கருத்து

Thursday, July 20, 2017

மறைக்க பட்ட வரலாறு - தொடர் பதிவுகள் - ஒரு விளக்கம்

இந்த பதிவை நீங்கள் ஒரு முன்னுரையாகவோ, அல்லது சார்பு நிலை விளக்கமாகவோ எடுத்து கொள்ளலாம்.  

இது 11 ஜுலை  2017, அன்று என் முகநூல் பக்கத்தில், உள்ள பதிவு 
//////////////////////////////////////////////////////////////////////////////
கடந்த ஒரு வாரகாலமாக நான் பதிவிட்டு வரும் மறைக்க பட்ட வரலாறு தொடர்பான பதிவுகளை பலர் ரசித்து பாராட்டினார்கள், அவர்கள் அனைவருக்கும் நன்றி.
என்பதிவுகள் இந்திய வரலாற்றின் மறைக்க பட்ட பகுதிகளை பற்றி எழுதுவதால்  பெரும்பாலும் பெரும்பான்மை மதமான இந்து மத விமரிசனமும்  மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பையும் முன்வைத்தே எழுதப்படும், அதில் எந்த மாற்றமும் இல்லை.
இதில் ரசிப்பவர்களை போலவே, வெறுப்பவர்களில் பலர், என்னை என் முப்பாட்டனின் மனைவி வரை திட்டி தம் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக்கொண்டனர், அவர்களை பற்றி நான் சிறிதும் கவலை கொள்வதில்லை. அவர்களின் பதிவுகளை நீக்குவதும் இல்லை, அதை பார்க்கும் நண்பர்களுக்கு அவர்களின் தரக்குறைவான சிந்தனை தெரியட்டும் என்று தான் அப்படியே வைத்துள்ளேன்
ஆனால் எல்லாத்தரப்பினரும் ரசிக்கும் இப்பதிவுகளில், ஒருசில இசுலாமிய நண்பர்கள், "ஒரு சிலர் மட்டுமே" அது தான் பார்த்தீர்களா எங்கள் இசுலாம் தான் உயர்ந்தது, கலிமாவில் என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா என்றெல்லாம் வந்து கமெண்டு போடுகிறார்கள்.
இது போன்ற கமெண்டுகள் என்னை தரக்குறைவாக திட்டி போடப்படும் கமெண்டுகளை விட கேவலமாகவே நான் பார்க்கிறேன்
இந்த என் நிலைப்பாடு பிடிக்காதவர்கள் விலகி கொள்ளலலாம், ஏற்றுக்கொள்பவர்கள் தொடரலாம்.
அவர்களுக்கு மட்டுமல்ல, இது போல கருத்துக்களை போடலாம் என எண்ணும் கிருஸ்துவ நண்பர்களுக்கும் சேர்த்து ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்,
நான் இந்து மதத்தை எந்த அளவு வெறுக்கிறேனோ அதற்கு சற்றும் குறையாமல் எல்லா மதத்தையும் வெறுக்கிறேன். என் இந்து மத மறுப்பு எந்த விதத்திலும் நீங்கள் சார்ந்திருக்கும் மதத்திற்கு ஆதாரவானது அல்ல.
அதற்கு உதாரணம் என் timline -ல் பழைய பதிவுகளை பார்த்தால் தெரியும், ஏசு சிலுவையில் உயிர்த்தெழுந்த கதையில் உள்ள எல்லா புரட்டுகளையும் எழுதியிருப்பேன்.
இஸ்லாத்தை பற்றி ஒன்று சொல்ல வேண்டும் என்றால்
இஸ்லாம் என்பதே யூதர்களின் ஆபிரஹாம் கோட்பாடுகளையும், பாரசீக நாட்டின் பழைய மதமான ஜொராஷ்ட்ரியன் என்ற இரண்டு மதங்களையும் சேர்த்து முஹம்மது கட்டிய ஒரு கலவை தான்.
"லா இலாஹி இல் அல்லாஹ்
முகமது ரசூல் இல்லா "
என்ற வரிகளே
"லா இலாஹி இல் அஹுரானஹ்
ஜாராதுஷ்ட்டு ரசூல் இல்லா "
என்ற மூல வரிகளில் இருந்து உருவியது thaan
அதாவது உலகில் அஹுரானா மட்டுமே ஒரே கடவுள் வேறு கடவுளே கிடையாது, அவருக்கு ஜாராதுஷ்டிரா மட்டுமே ஒரே தூதர் வேறு தூதர் கிடையாது என்பதே பொருள்
இந்த வரிகள் கி.மு5000-லிருந்து பாரசீகர்கள் பின்பற்றிய ஜொராஷ்ட்ரிய மூல மதத்தில், (அவர்களின் கடவுளின் பெயர் அஹுரா மஷ்டா) இருந்து
முகமது நபி உருவியது இந்த வரிகள்
எனவே மத துவேஷ எண்ணத்தோடு என் பதிவுகளுக்கு வரவேண்டாம். வந்தால் வரலாறை விட்டு விட்டு இதை போல பதில் சொல்லவும் நேரம் வீணாகிறது.
இந்திய வரலாறில் மறைக்கப்பட்ட பகுதிகளை பற்றி சொல்லும் பொது இந்து மதத்தின் தவறுகள் தான் அதிகம் பேசப்படும். அதை புரிந்து கொண்டு மத துவேஷ எண்ணங்கள் இன்றி என் பதிவை நோக்கும் படி கேட்டு கொள்கிறேன்
புரிந்து கொள்ளும் நண்பர்களுக்கு நன்றி,......

Wednesday, July 19, 2017

திருப்பதி கோயில் – அதிகம் தெரியாத உண்மைகளும் வரலாறும் – பகுதி- 2


திருப்பதி கோயில் உண்மையில் ஒரு புத்த மத விகாரம் (புத்தகோயில்), என்றோம் பின் முதல் பகுதியில் அது தொடர்பான இந்து மத பின்னணி புராண இதிகாச சான்றுகளையும் அதில் உள்ள கதைகளை பார்த்தோம்.

புத்தர் கோயில் என்று சொன்னாயே அது பற்றி போன பகுதிகளில் ஒன்றுமே சொல்லவில்லையே  என்று கேட்கும் நண்பர்களுக்கு நான் சொல்வது சற்று பொறுமையாக இருங்கள், அது புத்தர் கோயில் என்பது இந்த பகுதியிலும் நான் நிறுவ வரவில்லை, கடைசி இரண்டு பகுதிகளில் தான் அது பற்றி சொல்லப்போகிறோம்.


அப்படி என்றால் இறுதி இரண்டு பகுதகளை மட்டும் நேரடியாக போட வேண்டியது தானே என்று கேட்கலாம், பிரச்சனை ஒன்றும் இல்லை, பின்னர் நாசாவில் வேலை செய்யும் நமது வாட்சப் விஞ்ஞானிகள் அந்த குருப்பில் இப்படி சொன்னார்கள் அப்படி சொன்னார்கள் என்று இம்சை செய்வார்கள்,

அதனால் தான் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நாம் இதை நிருபிக்கவேண்டும் என்பதாலே தான் இத்தனை பகுதிகள் மற்றும் விளக்கங்கள். அது ஒரு புத்தர் கோயில் என்று நிறுவதற்கு முன் அது விஷ்ணு கோயில் அல்ல என்பதன் விளக்கங்களே முதல் மூன்று பகுதிகளின் நோக்கம்

இதுவரை முதல் பகுதியல் வேங்கடச்சல இதிகாச மாலையின் படி நாம் அறிந்துகொண்டது, சும்மா பூட்டி கிடந்த கோயிலை, யார் அபகரிப்பது என்ற போட்டியில் தந்திரமாக ராமானுஜர் வெற்றி பெற்றதால் 11-ஆம் நூற்றாண்டில், கோயில் வைணவர் வசம் சிக்கியது, பின் கிருஷ்ணதேவராயனின் காலத்தில் வைணவர் கோயிலாக நிரந்தரம் ஆக்கப்பட்டது.

இருப்பினும் 11ஆம் நூற்றாண்டுக்கு பின்னும் பலர் அந்த கோயிலை முருகன் கோயில் என்றே சொல்லி வந்தனர், நம் தமிழ் நாட்டில் வேங்கடசுப்பிரமணியன் என்ற பெயரை மிக சாதாரணமாக காணலாம், அதற்கு காரணமும் இந்த வேங்கட மலை உரிமை பிரச்சனை தான் காரணம்.


வேங்கட மலை முருகனுக்கே சொந்தம் என்று:

  1. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணாச்சல கவிராயர்
  2. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவஞான முனிவர்
  3. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர்
  4. 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார்

போன்ற பலர் தங்கள் நூல்களில், வேங்கடம் முருகன் கோயிலே என்று பல பல பாடல்களில் உரிமை கொண்டாடி உள்ளனர். அது பற்றிய அந்த சுவையான பாடல்களை தேர்ந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் 1988-ல் புதுச்சேரியை சேர்ந்த முனைவர் சுந்தர சண்முகனார் எழுதிய வேங்கட வேலவன் என்ற நூலில் இந்த பாடல்கள் தொகுப்பட்டு இருக்கிறது கூகிளில் தேடி தேரிந்து கொள்ளலாம்.

11ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் வைணவர் வசம் ஆகிவிட்டது, எனவே அதற்கு பின் உள்ள இலக்கிய சான்றுகள் நமக்கு நேரடியாக எந்த உதவியும் செய்யபோவதில்லை. எனவே அதற்கு முன் அந்த கோயிலின் நிலைமை என்ன என்று இலக்கிய சான்றுகளை நோக்குவோம்.

இந்த இலக்கிய சான்றுகளை சமஸ்கிருதம் மற்றும் தமிழ் நூல்கள் என்று இருபிரிவுகளாக பார்க்கலாம்.

முதலில் சமஸ்கிருத நூல்கள் என்று பார்த்தால், மகாபாரதம், ராமாயணம், குப்தர்களின் காலத்தில்(கிபி 2-3 நூற்றாண்டு) வாழ்ந்த காளிதாசரின் நூல்கள் என்று எந்த சம்ஸ்கிருத நூல்களிலும் வேங்கட மலை பற்றியோ அங்கே வாழும் ஸ்ரீநிவாசன் பற்றியோ எந்த குறிப்புகளும் இல்லை.

காப்பியங்களை விட்டு விட்டு புராணங்களை பார்த்தோமானால், மிக பிரபலமான விஷ்ணு புராணத்திலோ அல்லது பாகவத புராணத்திலோ கூட வேங்கட மலை பற்றியும் அங்கே இருக்கும் கடவுளை பற்றியும் எந்த குறிப்பும் இல்லை. இவை இரண்டும் 9-10 நூற்றாண்டில் எழுதப்பட்டவை.

ஒருவேளை வட இந்திய மக்கள் தென்னிந்தியாவுடன் மதம் சார்ந்த பெரும் தொடர்பு கொள்ளவில்லையோ என விடமுடியாது, ஏனெனில், பாரதமும் ராமாயணமும் பல்லவர் காலத்தில் 7-8 நூற்றாண்டுகளில் தமிழகத்தில் பெரும் சிறப்புடன் விளங்கி வந்தது. பல கோயில்களில் இந்த புராணபாராயணம் அரசர்களின் ஆதரவுடன் சிறப்பாக நடந்துவந்தது தென்னிந்தியர் காசி செல்வதும் வடஇந்தியர் குமரிகடலுக்கு வருவது பற்றியும் மணிமேகலையில் சொல்லப்படுகிறது.

ராமானுஜர் காலமான 11ஆம் நூற்றாண்டுக்கு பிறகு எழுத்தப்பட்ட நூல்களான மிக மிக பிற்காலத்தை சேர்ந்த வராக புராணம், பவிஷ்யஜோதிர் புராணங்களில் மட்டுமே திருப்பதி தல புராணக்கதை பற்றி தெளிவாக சொல்கிறது, அதற்கு முந்தைய எந்த நூல்களும் எதுவும் சொல்ல்வதில்லை


தமிழ் இலக்கிய சான்றுகளை பார்த்தோம் என்றால், அதாவது ராமானுஜர் காலத்துக்கு முன்பு உள்ள காலத்தில், வேங்கடம் என்ற சொல் தொல்காப்பியம் மற்றும் சிலப்பதிகாரம் என்ற இரண்டு நூல்களில் மட்டுமே வருகிறது. இதில் ஒரு வேடிக்கையான வினோதம் என்னவென்றால் சிலப்பதிகாரத்தின் இரண்டாம் பாகம் போல எழுதப்பட்ட மணிமேகலையில் ஒரே ஒருஇடத்தில் கூட வேங்கடம் அல்லது வேங்கடமலை என்ற சொல் கூட பயன்படுத்தப்படவில்லை\

முதலில் தொல்காப்பியம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்,

“வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து “

என்ற வரிகளுடன் இந்த பாடல் தொடங்குகிறது, உடனே தமிழ் அறிஞர் என சொல்லிக்கொள்ளும் வைணவ பார்பனர்கள், பார்த்தாயா தொல்காபியத்தில்; வேங்கடம் என்று சொல்லியிருகிறது என்பார்கள், இதில் கவனிக்க வேண்டியது வேங்கடம் என்னும் சொல் அங்கு என்ன பொருளில் சொல்லப்பட்டது என்பதைத்தான் நாம் கவனிக்கவேண்டும் 

வடக்கே வேங்கடம் முதல் தெற்கே தென்குமரி வரை எல்லையாக கொண்ட தமிழ் பேசும் நிலப்பகுதி என்று மட்டும் தான் சொல்கிறதே தவிர, அங்கு விஷ்ணு இருப்பதாக சொல்லப்படவில்லை.

அடுத்து சிலப்பதிகாரத்தில் பார்த்தால்

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல-
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,

இந்த வரிகள் சிலப்பதிகாரத்தில், மதுரை காண்டம், காடுகாண் காதை பகுதியில் 41-50ஆவது வரிகளில் வருகிறது, இதில் எந்த வித சந்தேகத்துக்கும் இடமில்லாமல்.

அருவி வழியும் வேங்கடமலையில், பகைவரை அழிக்கும், சக்கரம், வெண்மையான சங்கும், கையில் தாமரை பூ, மார்பில் வைஜயந்தி மாலை என்ற ஆறம் பூண்ட கடவுள் என்று மிக மிக தெளிவாக விஷ்ணுகோயில் என்று சொல்கிறது.

11-ஆம் நூற்றாண்டில் இந்த கோவில் வைணவர் வசம் வந்த பின்தான், ராமானுஜர் அந்த கடவுள்சிலைக்கு வைஜயந்தி மாலை என்ற ஆரத்தை அணிவித்தார்,

அப்படி இருக்கும் போது இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த சிலப்பதிகாரத்தில், அதை பற்றி எப்படி எழுதினார்கள்    

சமண மதத்தை பரப்பவேண்டிய இளங்கோ என்ற ஒரு புலவர் ஒரு விஷ்ணு கோயிலை பற்றி இத்தனை தெளிவாக குறிப்பிடவேன்டிய காரணம் என்ன.? அதிலும் சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் என்று ஒரு சமண பெண் துறவி எப்போதும் வருவார்

இந்து மதத்தில் தீவிரமான கொள்கை உள்ள ஒரு எழுத்தாளர், நாகூரை பற்றி எழுத வேண்டிய தருணம் வந்தால் நிச்சயமாக, அங்கு ஒரு தர்கா இருக்கிறது, ஒரு சர்ச் இருக்கிறது என்று கூட எழுதமாட்டார், அவர் சொல்லவேண்டிய செய்தியை மட்டும் சொல்லிவிட்டு போவார். அது இயல்பான ஒரு செயல். அது போல சமண மதத்தை பரப்ப வேண்டிய ஒருவர் ஏன் ஓர் விஷ்ணு கோயிலை பற்றி சம்பந்தம் இல்லாமல் இவ்வளவு விளக்கம் கொடுக்க வேண்டும்

அப்படி என்றால் அது விஷ்ணு கோயில் என்று சிலப்பதிகார ஆசிரியர் கூறுகிறார் என்று ஒத்துகொள்ளத்தான் வேண்டுமா, அதை முடிவு செய்யும் முன் வேறு ஒரு சிலப்பதிகார பாடலை பார்ப்போம். இந்த பாடல் புகார் காண்டத்தில், நாடு காண் காதையில் 185-189ஆவது வரிகளில் வருகிறது

சினவரன் தேவன் சிவகதி நாயகன்
பரமன் குணவதன் பரத்திலொளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்...
சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருண்முனி


அருகதேவனின் சிறப்புகளை சொல்லும் இந்த பாடல், "அருகதேவன், என்பவர் சங்கரன், ஈசன், நான்முகன், எட்டுவகையான நல்ல குணமுடையவன்,  அவன்  ஒரு சுயம்பு வேதத்தை ஓதாமலே உணர்ந்தவன்,"  என்று சொல்கிறது


சிலப்பதிகாரம் சமண சமயத்தை பரப்பும் ஒரு நூல். உண்மையில் இளங்கோஅடிகளுக்கு சித்தம் கலங்கி இருந்தால் மட்டுமே இப்படி ஒரு வரிகளை எழுதியிருக்க முடியும்.

நாம் எங்காவது யாராவது இப்படி எழுதியதாக கேள்வி பட்டிருகிறோமா, ஏசு கிருஷ்ணனை போல நல்லவர். முகமது நபி முருகனை போல வீரமானவர், பிள்ளையார் புத்தரை போல அன்பானவர் என்று.

முதலில் ஒரு மதத்தை சேர்ந்த அதை பரப்பவேண்டிய கடமையில் உள்ள ஒருவர், தன் மத கடவுளை வேறு ஒரு மத கடவுளின் சிறப்புகளோடு ஒப்புமை படுத்தி எழுதுவாரா.

மேலே சொல்லப்பட்ட இந்த பாடல்கள்  அனைத்தும் சிலப்பதிகாரத்தில் பிற்கால சேர்கை,

இதை நாம் எப்படி தெரிந்த கொள்வது என்றால் சிலப்பதிகாரத்துக்கு முதலில் உரை எழுதிய இளம்பூரனார் சொல்வது என்னவென்றால் “அன் விகுதி அதாவது ஒருவரின் குணத்தை குறிக்கும் எதிர்கால தன்மை ஒருமை பெயர்களின் பயண்பாடு தன்னுடைய காலத்தில் ஏற்பட்டது என்றும் பழந்தமிழ் இலக்கியங்களில் அது கிடையாது என்கிறார்.

மேல உள்ள பாடலில் தான் எத்தனை “அன்”

வியாசர் எழுதியதாக சொல்லப்படும் மூல மகாபாரதம் வெறும் 18000 பாடல்கள் கொண்டது அது இன்று 1,00,000 பாடல்கள் ஆகிவிட்டது. அது போல தான் தமிழ் இலக்கியங்களும் பல பிற்சேர்க்கைகள் கொண்டது.

முதலில் சொன்ன தொல்காப்பிய வரிகளே சந்தேகத்திற்கு உட்பட்டது, ஏனெனில் அந்த வரிகள் தொல்காப்பியரால் எழுதப்பட்டது அல்ல. தொல்காப்பியர் காலத்தில் விந்திய மலைக்கு தெற்கில் உள்ள எல்லோரும் தமிழ் பேசியவர்களே. ஆனால் அந்த வரிகள் வேங்கடமலைக்கு தெற்கே உள்ளவர்கள் மட்டுமே தமிழ் பேசினார்கள் என்று சொல்கிறது. களப்பிரர் காலமும் அதற்கு முந்தைய காலத்திலும் விந்திய மலைக்கு தெற்கே உள்ள எல்லோரும் பேசிய மொழி தமிழ் தான், பிறகு எப்படி வடவேங்கிடதிற்கு தெற்கே மட்டும் தமிழ் கூறும் நல்லுலகம் ஆனது.

அந்த வரிகள் தொல்காபியத்திற்கு, பனம்பாரனார் என்ற புலவர் எழுதிய சிறப்பு பாயிரம் என்ற பாடல் (பாயிரம் என்றால் இன்றைய நூல் முன்னுரையை போன்றது) இந்த பாயிரம் எழுதும் வழக்கமே ஆழ்வார்கள் காலத்தில் வந்தது. தொல்காப்பியர் காலத்தில் பாயிரம் எழுதும் வழக்கம் கிடையாது.

மற்றும் ஒரு வேடிக்கை என்னவென்றால், தொல்காப்பியரின் நண்பர் என்று சொல்லப்படும் இந்த பனம்பாரனார் புறநானூற்று தொகுப்பில் 52 பாடல்கள் எழுதி உள்ளார் ஒன்றில் கூட அவர் வேங்கட மலை என்று ஒரு மலையை பற்றி கூட சொல்லவேயில்லை.

இதை நாம் கேட்டால், பார்பன தமிழ் அறிஞர்கள்,

  1. அந்த பனம்பாரனார் வேறு, இந்த பனம்பாரனார் வேறு,
  2. அந்த நக்கீரர் வேறு, இந்த நக்கீரர் வேறு,
  3. அந்த ஔவையார் வேறு, இந்த ஔவையார் வேறு,
என்று கதை விடுவார்கள். புலவர்கள் என்ன அரசர்களா முதலாம் நக்கீரர், இரண்டாம் நக்கீரர் என்று பெயர் வைத்து கொள்வதற்கு. எழுதும் பாடலே முழுக்க முழுக்க தனது சொந்த சிந்தனையாக இருக்க வேண்டும் என்று என்னும் புலவர்கள் ஏன் வேறு ஒரு புலவரின் பேரை வைத்து கொள்ளவேண்டும். கனக சுப்புரத்தினம் கூட பாரதிதாசன் என்று தான் வைத்து கொண்டார், இரண்டாம் பாரதி என்று வைத்து கொள்ளவில்லை.

தமிழ் இலக்கியத்தில் இளம்பூரனார், நச்சினார்கினியர் போன்ற உரை ஆசிரியர் காலத்தில் பல நூல்கள் தொகுக்கப்பட்டன,

பின்னர் குலோத்துங்க சோழன் காலத்தில் நம்பியாண்டார் நம்பியால் நூல்கள் தொகுக்கப்பட்டன,
இறுதியாக உ.வே.சாமிநாத ஐயரால் நூல்கள் தொகுக்கப்பட்டன.

இந்த தொகுத்தவர்கள் தங்கள் வசதிக்கு ஆங்காங்கே சில சேர்க்கைகளும், சில நீக்குதல்களும் செய்திருகிறார்கள்.

உதாரணமாக நம்பியாண்டார் நம்பி சைவ சமய நூல்களாக பன்னிரு திருமுறைகள் என்று 12 நூல்களை 12 ஆம் நூற்றாண்டில் தொகுத்தார் அதில் திருமுருகாற்றுப்படை என்பதும் ஒன்று.

ஆனால் பின்னாளில் உவே சாமிநாத ஐயர், திருமுருகாற்றுப்படை நூலை சங்ககால பத்துப்பாட்டு தொகுப்பில் சேர்த்து முருகன் வழிபாடு சங்ககாலத்திலே உண்டு என்று எல்லோரையும் நம்ப வைத்து விட்டார்.

பத்துப்பாட்டில் எந்த நல்ல தமிழ் நூலை தூக்கி எரிந்து விட்டு திருமுருகாற்றுப்படையை சேர்த்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் அதில் இந்து மத பெருமை சேர்க்க இயலாது, என்று கடைசிவரை அதை அச்சில் ஏற்றாத நல்லவர் தான் தமிழ் தாத்தா உவே சாமிநாத ஐயர்.

இந்த இரண்டாம் பகுதியல் நாம் பார்த்த வரை, ராமானுஜர் காலத்துக்கு முற்பட்ட இலக்கியங்களில்:

  1. சமஸ்கிருத இலக்கியங்களில் வேங்கடமலை விஷ்ணு கோயில் என்று எங்கும் சொல்லப் படவில்லை
  2. தமிழில் இரண்டு இடத்தில் மட்டுமே சொல்லப்படுகிறது அவைகளும் பல விதமான உள்நோக்கங்களோடு சேர்க்கப் பட்டிருக்கவேண்டுமே தவிர, அவை அந்த இடங்களில் இயல்பாக இல்லை

இதற்கு மேல் வெளிநாட்டு பயணிகளான யுவாங் சாங், இலங்கையில் இருந்து இங்கு வந்தவர்கள், கல்வெட்டுகள் போன்ற வரலாற்று குறிப்புகளை அடுத்த மூன்றாவது பகுதியில் பார்ப்போம்

உபரி தகவல்:
சிலப்பதிகாரம் இளங்கோ அடிகள் தனியாக அமர்ந்து யோசித்து எழுதிய கதை அல்ல சங்க காலத்தில் செவிவழி செய்தியாக சொல்லப்பட்ட ஒரு சிறு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பெரும் காப்பியமாக அவர் எழுதினர். இந்த கருத்தை ஏற்கமுடியாதவர்கள்

நற்றிணை தொகுப்பில் உள்ள 216ஆவது பாடலை பார்க்கவும், அந்த பாடல் மதுரை மருதனிளநாகனார் எழுதியது வரிகள் கீழே......
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையர் ஆயினும்,
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே.

இந்த வரிகளின் பொருள்

ஏதிலாளன் செயலாலே கவலையுற்ற திருமாவுண்ணி என்பாள் ஒரு பரத்தை, அவள் தான் காதலித்த தலைவன் தன்னைக் கைவிட்ட காரணத்தாலே தனது ஒரு முலையை அறுத்துக்கொண்டனள், ஆனாலும் அவளது  அச்செயல் கேட்ட எல்லோரும் அவளுக்காக மணம் இறங்கினர் ஆனால்  உண்மையாக வருந்தினாரிலர் அதுபோலவே, என் வருத்தத்தைக் கேட்டவரெல்லாம் அத் திருமாவுண்ணியின் வருத்தம் கேட்டவர் போல ஓரளவு இரங்குவாரே ஆனாலும் முழுமையாக வருந்துபவரல்லர். அன்புடையோர் மட்டுமே வருந்துவர். என்மீது என் தலைவன் அன்பிலன் ஆகிவிட்டான், அதனால்   அவன்கூட என்னிலை கேட்டு வருந்துவானல்லன் போலும் எனப் புலம்பினாள்  தலைவி

மதுரை மருதனிளநாகனார் சிலப்பதிகார காலத்துக்கு முந்தியவர் எனவே தலைவனின் பிரிவினால் முலையை அறுத்துக்கொண்ட திருமாவுண்ணி என்று பாத்திரமே பின்னாளில்  கண்ணகி பாத்திரத்துக்கு உந்து சக்தியாக இருந்திருக்கவேண்டும்

Book Wrapper

இந்த நூலை  வாங்க  விரும்பினால்  இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்     விலை ரூ.200 மட்டுமே