Wednesday, August 9, 2017

ஆண்ட பரம்பரை – ஓரு சிறப்பு பார்வை

சமீபகாலமாக, முகநூலில் மட்டுமல்ல, போதுவெளிகளிலும், நான் கவனித்த ஒரு போக்கு என்னவென்றால்.
ஆங்கிலேயன் வருவதற்கு முன் நாங்கள் எல்லோரும் சாதி என்றால் என்னவென்றே தெரியாமல் ஒற்றுமையாக வாழ்ந்தோம் அவன் வந்து தான் சட்டம் போட்டு, எங்களை இப்படி பிரித்துவிட்டான் தெரியுமா என்பது ஒரு சாராரின் வாதம்
இந்துமதத்தின் மூலமுமாக தமிழுக்கு பார்பனர் எவ்வளவு தொண்டு செய்திருக்கிறார்கள் என்பது ஒரு சாராரின் வாதம்
எல்லோருமே, யாரை பார்த்தாலும் நாங்கெல்லாம் அந்த காலத்துல ஆண்டபரம்பரை தெரியுமா என்ற ஒரு முரட்டு வாதம் வைக்கிறார்கள்.
சரி முன்னோர் பெருமை பேசுகிறார்கள் என்று நினைத்தால், எல்லோருமே சொல்வது நாங்க மட்டும் தான் ஆண்டபரம்பரை மற்றவர்கள் எல்லாம் எங்களுக்கு அடிமை பணி செய்த பரம்பரை என்று வேறு ஒரு வாதத்தை வைக்கிறார்கள்.
இவர்கள் எல்லோருமே, பார்பானை திட்டினால் கண்டிப்பாக பார்பானுக்கு முன்னால் ஒடிவந்து உனக்கு என்னடா தெரியும் என்று கேட்கிறார்கள்.
மொத்தத்தில் நான் புரிந்து கொண்டது என்னவென்றால், தமிழர்கள் என்று தன்னை, ஆண்டபரம்பரையாக அடையாளப்படுத்தி கொள்ள இந்துமதம் அடையாளமாக தேவைபடுகிறது, அந்த மதபுராணக் கதைகள் சொல்லிகொடுக்கும் பார்பனன், தன் பாரம்பரிய காவலனாக தமிழர்கள் கண்களுக்கு தெரிகிறான்.

பிராமணன் என்று தனக்கு மேலே ஒருவன் இருப்பதை ஒப்புக்கொண்டால் தான் தன்னை ஆண்டபரம்பரை சத்திரியன் என்று சொல்லிக்கொள்ள முடியும் என்றாலும் பரவாயில்லை, அதற்காக நான் பார்பானுக்கு ஆதரவு கொடுப்பேன் என்பதே இவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. 

சரி பார்பானின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது என்று பார்ப்போம், வெறும் அனுமானங்கள் மூலம் அல்ல வரலாற்று பூர்வமாக பார்ப்போம்.
1600-களில் மாவீரன் சத்திரபதி சிவாஜியையே சத்திரியன் அல்ல, அவனுக்கு மன்னனாக பட்டம் சூட்ட மாட்டோம் என்று சொன்னவர்கள் தான் இந்த திருட்டு பார்பனர்,

மாவீரன் சிவாஜி, தவிர வேறு யாருமே அவுரங்கசீபை எதிர்த்து போராடவும் இல்லை வெற்றி பெறவும் இல்லை, அவனுக்கே பார்பனரால் அந்த கதி என்றால் மற்ற ஆண்ட பரம்பரைகளை என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்
(இது பற்றி விரிவாக படிக்க எனது சத்ரபதி சிவாஜியின் - தெரியாத பக்கங்கள் பகுதியை  பாருங்கள்)

குப்தர்கள் காலத்திலிருந்து மொகலாயர் காலம் வரை பார்பனருக்கு தங்கள் மனுதர்ம நாலு வருண விதிகளை மக்கள் மேல் செலுத்தி நோகாமல் வாழ எந்த தடையும் ஏற்படவில்லை.
ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் அது முடியவில்லை, அவர்கள் குழந்தை திருமணம் முதல் பெண்களை உயிருடன் எரிக்கும் உடன்கட்டை ஏரும் வழக்கம் வரை பலவற்றை தடுத்து சட்டம் போட்டார்கள்,

அவர்களிடம் பார்பனரின் பருப்பு வேகவில்லை.
1837-ல் கிழக்கிந்திய கம்பனி ஆட்சியில், கிருஸ்துவர்களுக்கு இங்கிலாந்து நாட்டின் சட்டம், இஸ்லாமியர்களுக்கு ஷரியத் சட்டம் உள்ளது
இந்துகளுக்கு ஏற்ற மாதிரி எப்படி சட்டம் இயற்றுவது என்று ஆங்கிலேயர் பார்பனரை கேட்டார்கள்.
இது நடந்ததது 1837 முதல் 1928 வரை
பார்பனர் சொன்னது இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 1 
பார்பனர்களின் வாதம், இந்துகளில் பிராமணர், சத்திரியர்கள் இருவரை தவிர யாருக்கும் சொத்துகளை வாங்கவோ விற்கவோ உரிமையில்லை,
மனுதர்மபடி பிராமணர் மற்றும் சத்திரியர் மட்டுமே சொத்துகளை வைத்து கொள்ள உரிமை உண்டு.
புராண காலத்தில் பரசுராமர், தன் தந்தையை ஒரு சத்திரியன் கொன்ற கோபத்தில் இந்தியாவில் எல்லா சத்திரியர்களையும் கொன்றுவிட்டார், எனவே இந்தியாவில் இப்போது மீதம் இருப்பவர்கள் அனைவரும் பார்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற பிரிவுகளில் மட்டுமே வருவார்கள், மனு தர்மப்படி இவர்களில் பார்பனரை தவிர வேறு யாருக்கும் சொத்து வைத்து கொள்ள உரிமையில்லை,

எனவே, பார்பனரை தவிர வேறு யாருக்கும் சொத்து வைத்து கொள்ள உரிமையில்லை என்று சட்டமியற்ற கோரி கிழக்கிந்திய கம்பெனி அரசுக்குக்கு 1837-ல் பார்பனர் மனு கொடுத்தனர்.

நல்லவேளை கிழக்கிந்திய கம்பெனியின் பிரைவி கவுன்சில் இப்படி ஒரேஅடியாக உங்கள் புராணக்கதைகளை ஏற்றுக்கொண்டு வேறு யாருக்குமே சொத்து வைத்து கொள்ள உரிமையில்லை என்றெல்லாம் ஒத்துகொள்ளமுடியாது, நிச்சயம் சத்திரியர்கள் இருப்பார்கள் ஏன்று சொல்லி அந்த முதல் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 2 – ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண் (I.L.R.10 மற்றும் I.L.R.12) 1886

இந்த வழக்கு வரும் போது கம்பெனி ஆட்சி முடிந்து பிரிட்டிஷ் ஆட்சி வந்துவிட்டது.

பார்பானுக்கு சிப்பாய் கலக்கம் பற்றியெல்லாம் கவலை இல்லை, இந்தியாவில் சத்திரியர்கள் யாருமே இல்லை என்பதை நிருபணம் செய்ய மீண்டும் போராடுகிறான்

இந்த வழக்கு வழக்கம் போல பார்பனருக்கும், வங்காள கயஸ்தா மற்றும் பீகாரின் கயஸ்தா பிரிவினர் இவர்களில் யார் சத்திரியர் என்று பிரிட்டிஷ் கோர்ட்களில் நடைபெறுகிறது 

இந்த வழக்கில் வங்காளத்தில் உள்ள கயஸ்தா பிரிவினர் சத்திரியர் தான் என்று தீர்ப்பு பிரிட்டிஷ் கோர்ட்களில் வழங்குகிறார்கள்

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 3 – ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண் (1916) 20 Cal. W.N.901 
1916-ல் மறுபடியும் பார்பனர் வழக்கு தொடர்ந்து வங்காளத்தில் உள்ள கயஸ்தா பிரிவினர் சத்திரியர் அல்ல என்று ஆங்கிலேய கோர்டில் தீர்ப்பை பெறுகிறார்கள். இந்த வழக்கு 1926-ல் தான் முடிகிறது.

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 4 – ஆங்கிலேயரின் சட்ட ஆவண எண் .L.R.
(1928) 52 Bom.497
மறுபடியும் சிவாஜி பரம்பரையை விடாமல் வம்புக்கிழுத்த  பார்பனர், 1926-ல் வெங்கோஜி அல்லது எக்கோஜி என்று அழைக்கப்பட்ட சிவாஜியின் தம்பியின் வழி வந்தவர்கள் தஞ்சை மன்னர்களாக இருக்கிறார்கள் அவர்கள் சத்திரியர்கள் அல்ல சூத்திரர்கள் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்கள். 

அந்த வழக்கின் 229 பக்க தீர்ப்பில், மகாராஷ்டிரத்தில் உள்ள சிவாஜி வம்சம் என்று சொல்பவர்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம் (long gap from 1600-1900)
  1. முதல் ஐந்து குடும்பங்கள் 
  2. இரண்டாவது 96 குடும்பங்கள் 
  3. மற்றவர்கள் 

என்று பிரிக்கலாம், இவர்களில் முதல் இரண்டு பிரிவினரும் சத்திரியர்கள், அதனால் வெங்கோஜி அல்லது எக்கோஜி என்று அழைக்கப்பட்ட சிவாஜியின் தம்பியின் வழி வந்தவர்கள் சத்திரியர்களே என்று பிரிட்டிஷ் கோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது

இந்தியாவில் சத்திரியர்கள் என்று யாரும் இல்லை என்று பார்பனர் தொடுத்த வழக்கு எண் – 5 
மதுரையை சேர்ந்த யாதவர்கள் 1927-ல் நாங்களும் யாதவ குலத்தில் பிறந்த கிருஷ்ணனின் வம்சம் நாங்களும் சத்திரியர்கள் தான் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க, எதிர்த்து வாதாடிய பார்பனர் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வைக்கிறார்கள்.

இப்படியாக ஆங்கிலேயர் காலத்திலும் பார்பனர் நிறுவ முயன்றது என்னவென்றால், இந்தியாவில் சத்திரியன் என்று யாரும் இல்லை.

இந்து மனு தர்மப்படி பிராமணன் மட்டுமே சொத்து வைத்து கொள்ளலாம் படிக்கலாம், இன்னும் பிற பிற லாம் லாம் லாம்

ஆகவே, தன்னை ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படும் எல்லோரும் ஒன்று புரிந்து கொள்ளுங்கள்,

 பார்பான்  உங்களை நேரில் பார்க்கும் போது ஆமா அய்யா நீங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய ஆண்டபரம்பரை என்றுதான் சொல்லுவான்

ஆனால் உங்களை சூத்திரன் ஆக்க சட்டப்படி எல்லா வேலையும் செய்வான்.

எல்லா சாதியிலும் உங்கள் சொந்தகாரன் (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்) உங்களை ஆண்டபரம்பரையில் சேர்க்க பல டகால்டி வேலை செய்வான் அதையெல்லாம் காதில் போட்டுகொள்ளாதீர்கள்

உண்மையில் உங்களுக்கு உங்கள் சாதி உங்கள் சமுகத்தின் மீது அன்பு இருந்தால், ஆண்ட பரம்பரை, புராண கதை சொல்லி பெருமை பேசுவதை விட்டு விட்டு, உங்கள் சமுகத்தில், கல்வியில், அறிவில் நாம் இப்போது என்ன செய்கிறோம் என்று சிந்தியுங்கள்

குறைந்த பட்சம் உங்கள் சொந்த சமுகத்தில், உள்ள ஏழை மாணவர்கள் படித்து முன்னற உதவுங்கள், பணமாக முடியவில்லை என்றாலும் உங்கள் நேரத்தை கொடுங்கள், படிப்புக்காக வங்கியில் கடன் வாங்க உதவுங்கள்  

ஆண்ட பரம்பரை கதை பேசினால், பார்பான் உண்டியல் மட்டுமே நிரம்பும், அப்போதும் நீங்கள் ஆண்ட பரம்பரை இல்லை என்று அவன் எங்காவது கோர்டில் கேஸ் போட்டு கொண்டுதான் இருப்பான்.

Tuesday, August 8, 2017

சோழர் வரலாறு - ஏன் மறைக்கபடுகிறது

இந்திய வரலாற்றிலேயே தெளிவான கல்வெட்டு சான்றுகள் உடைய ஒரே வரலாறு சோழர் வரலாறு
431 வருடம் இந்தியாவை ஆண்ட இந்தோனேசியா வரை படை எடுத்து வென்ற ஒரே இந்திய அரச வம்சமான சோழர் பற்றி தமிழ் நாட்டு பள்ளி வரலாற்று புத்தகங்களில் கூட 4-5 பக்கங்கள் மட்டுமே உள்ளது.
மற்ற மாநில குறிப்பாக CBSE பள்ளி வரலாற்று புத்தகங்களில் ஒன்றுமே கிடையாது
தமிழன் என்பதால் வரலாறும் இல்லை என்றாகிவிடுகிறது
431 வருடம் எந்த இடைவெளியும் இல்லாமல் ஆண்ட பிற்கால சோழர்களும் அவர்களின் காலமும்
  1. Vijayalaya Chola 848–891
  2. Aditya Chola I 891–907
  3. Parantaka Chola I 907–950
  4. Gandaraditya Chola 950–957
  5. Arinjaya Chola 956–957
  6. Sundara Chola 957–970
  7. Aditya Chola II (co-regent)
  8. Uttama Chola 970–985
  9. Rajaraja Chola I 985–1014
  10. Rajendra Chola I 1012–1044
  11. Rajadhiraja Chola 1044–1054
  12. Rajendra Chola II 1054–1063
  13. Virarajendra Chola 1063–1070
  14. Athirajendra Chola 1070–1070
  15. Kulothunga Chola I 1070–1120
  16. Vikrama Chola 1118–1135
  17. Kulothunga Chola II 1133–1150
  18. Rajaraja Chola II 1146–1173
  19. Rajadhiraja Chola II 1166–1178
  20. Kulothunga Chola III 1178–1218
  21. Rajaraja Chola III 1216–1256
  22. Rajendra Chola III 1246–1279




Friday, August 4, 2017

விவசாயிகளின் கூக்குரல் – ஆடியோ கிளிப் – பாகம் 2


நேற்று நான் விவசாயிகளின் கூக்குரல் என்று போட்ட பதிவில், பலர் அவரவர் கருத்துகளை பதிவு செய்தனர்,

குறிப்பாக ஒரு நண்பர், உங்கள் பதிவு நிச்சயம் சரியாக இருக்கும் என்றுதான் முழுவதும் படிக்காமலே லைக் போட்டேன், முதலில் விளக்கம் கொடுங்கள் என்று கேட்டார், 
இல்லையென்றால் உங்களுடன் நட்பில் இருப்பதை பற்றி மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார்
அவருக்கு மட்டுமல்ல, நேற்றைய பதிவை சரியாக புரிந்துகொள்ளாத மற்ற நண்பர்களுக்காகவுமே இந்த பதிவு

நேற்றைய பதிவில் என்மீது வைக்கப்பட்ட மிகப்பெரிய குற்றச்சாட்டு உனக்கு விவசாயியின் கஷ்டம் என்ன என்று தெரியுமா என்பதே.

விவசாயியின் கஷ்டம் என்ன என்று எனக்கு நன்றாக தெரியும் என்பதன் விளக்கம் தான் நேற்றைய பதிவு, என் பாட்டனே ஒரு விவசாய கூலியாக தன் வாழ்கையை தொடங்கியவர் தான்

நான் சொன்னது

விவசாயி சோறு போடுகிறான், குழம்பு ஊத்துகிறான் என்று செண்டிமெண்டாக பேசாமல், அவர்கள் தங்கள் தொழிலை லாபகரமாக செய்ய என்ன வழி என்று அவர்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். என்பதுதான் 

விவசாயம் செய்து தன் குடும்பத்தையே காப்பாற்றமுடியாதவன் எப்படி ஊருக்கெல்லாம் சோறு போடுவான் என்பதே என் கேள்வி.

தஞ்சை விவசாயிகள் என்ற இந்த போராட்டமே ஒரு ஏமாற்று வேலை

எல்லோருக்கும் தெரிந்த தஞ்சை பகுதியில் தஞ்சை விவசாயிகளால் நடத்தப்பட்ட வெறியாட்டம் என்ன தெரியுமா?

தஞ்சை பகுதிகளில் விவசாய கூலிகள், பெரும்பாலும் தலித்து மக்கள், தங்கள் கூலியை வெறும் ஐம்பது பைசா உயர்த்தி கேட்ட காரணத்துக்காக

1968-ல் தங்களிடம் வேலை செய்த விவசாய கூலிகள் சுமார் 44 பேர்களை உயிருடன் எரித்து கொன்றார்கள்.

இறந்தவர்களில் 5 பேர் வயதான முதியவர்கள், 16 பெண்கள், 23 குழந்தைகள்.

அப்போது முதலமைச்சர் அறிஞர் அண்ணா, தன் அமைச்சரவையில் இருந்து இரண்டு மந்திரிகளை அங்கே விசாரணைக்கு அனுப்பினார்,

ஒருவர் பொதுப்பணித்துறை அமைச்சர் கருணாநிதி, மற்றவர் சட்டத்துறை அமைச்சர் மாதவன். இவர்களின் விசாரணையின் முடிவில் தஞ்சை மாவட்ட பண்ணையார்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார்கள்.

பின் எதோ ஒரு உச்சி குடுமி நீதிமன்றத்தில் அனைவரும் விடுதலை செய்யபட்டார்கள்,

அந்த வழக்கின் முக்கிய குற்றவாளி இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு,

அவர் தான் 1968-ல் நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர், அவரையும் சேர்த்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இது எந்த வரலாற்று சம்பவம் என்று தெரியாத நண்பர்களுக்கு ஒரு சேதி,

இது தான் கீழ்வெண்மணி படுகொலை என்று சொல்லப்படும் பார்பனர் மற்றும் உயர்சாதி இந்துக்களால் நடத்தப்பட்ட கோர படுகொலை

வெறும் ஐம்பது காசுகள் கூலியை உயர்த்தி கேட்ட காரணத்துக்காக என் தலித்து சகோதரன் தனது குடும்பத்தோடு கொத்து கொத்தாக உயிருடன் எரித்து கொல்லப்பட்டான்

என் பாட்டன் ஒரு கூலியாக தொடக்கி வாழ்வில் வென்றது போல பல பாட்டன்கள் தங்கள் வறுமையை வென்ற கதை தமிழ் நாடு முழுவதும் உண்டு

இன்றும் ராமநாதபுரம், சிவகங்கை, கயத்தாறு, போன்ற பகுதிகளில் ஆறு, ஆற்றுபாசனம் என்றால் என்ன என்று கேட்பார்கள் அங்கேயும் விவசாயம் செய்கிறார்கள்,

பண்ருட்டி விழுப்புரம் போன்ற பகுதிகளில் முந்திரி விவசாயம் செய்கிறார்கள்,

இவர்கள் யாரும் தமிழகத்தின் விவசாயிகள் என்று சொல்லி போராட்டம் செய்யவில்லை.

இன்றும் அவர்கள் வழி வந்தவர்கள் பல தலைமுறைகளாக இன்றும் விவசாயம் செய்கிறார்கள், பிள்ளைகளை படிக்கவைக்கிறார்கள், அந்த விவசாயத்தின் மூலமே வாழ்கிறார்கள்

தஞ்சை விவசாயிகள், என்று சொல்லிக்கொள்கிற சில பண்ணையார்களை தவிர வேறு யாரும் புலம்புவது இல்லை

அவர்கள் மட்டுமே எல்லாரும் படித்துவிட்டு நகரத்துக்கு சென்றுவிட்டால் யார் விவசாயம் செய்வது, NREGA வருடத்தில் நூறுநாள் வேலை திட்டம் ஊழல் என்று புலம்புவது

அப்படியே மற்ற பகுதி விவசாயிகள் புலம்பினாலும் யாருக்கும் கேட்காது, அதை எந்த ஊடகமும் வெளியிடாது

காரணம் பெருவாரியான தஞ்சை விவசாய நிலங்கள் பார்பனர் மற்றும் உயர்சாதிகாரர்களின் நிலங்கள்

எல்லோருக்கும் தெரிந்த வெகுஜன ஊடகங்கள் எல்லாம் இன்றும் பார்பனர் கையில் மட்டுமே உண்டு

இப்போதாவது 
  1. ஏன் தஞ்சை விவசாயி மட்டும் போராடுகிறான், 
  2. அது மட்டுமே ஏன் எல்லா ஊடகத்திலும் வருகிறது, 
  3. தமிழ்நாட்டில் வேறு எங்குமே விவசாயிகளே இல்லையா என்று தெரிகிறதா.


மொத்த தமிழ் நாடும் அவனுக்கு குரல் கொடுக்கவேண்டும்,

அவா மேனி நோகாமல், கூலி ஒழுங்காக குடுக்காமல் விவசாயம் செய்வா.

ஆனால் வெறும் நெல்லுக்கு மார்கெட்டில் விற்கும் அரிசியின் விலை கிடைக்கவில்லை, என்று புலம்புவா

லாரியில் இவனது பொருளை ஏற்றி செல்லும் வியாபாரியை தரகர் என்பார், நெல்லை அரைக்கும் மில் வைத்திருப்பவனை திருடன் என்பார்

நாமும் விவசாயி சோறு போடுகிறான், குழம்பு ஊத்துகிறான் என்று உளருவோம்

Thursday, August 3, 2017

விவசாயிகளின் கூக்குரல் – ஆடியோ கிளிப்

இன்று இன்பாக்ஸில் ஒரு ஆடியோ கிளிப் வந்தது, 
கத்தி திரைப்படத்தின், பின்னணி இசையுடன், உருக்கமாக ஒருவர் அன்னைக்கு வாத்தியாருக்கு எவ்வளவு சம்பளம் வங்கி அதிகாரிக்கு எவ்வளவு சம்பளம், அன்னைக்கு நெல்லு ஒரு மூட்டை எவ்வளவு

இன்னைக்கு வாத்தியாருக்கு எவ்வளவு சம்பளம் வங்கி அதிகாரிக்கு எவ்வளவு சம்பளம், இன்னைக்கு நெல்லு ஒரு மூட்டை எவ்வளவு அந்த அளவுக்கு என் நெல்லுக்கு விலை ஏறவில்லை என்று உருக்கமாக கதறி கதறி பேசியிருந்தார்.

அந்த ஆடியோ கிளிப் கேட்டவுடன், எனக்கு தெரிந்த ஒரு விவசாயின் உண்மைக்கதையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைபட்டதன் விளைவு தான் இந்த பதிவு.

1900-ல், நெல்லை மாவட்டத்தில், களக்காடு என்னும் கிராமத்தில், சிதம்பரம், செல்லாயி என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கருக்கும் குறைவான சிறு நிலத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஐந்து ஆண் பிள்ளைகள். 1915-ல் சிதம்பரம் திடிரென மரணம் அடைகிறார்.

செல்லாயியை, சிதம்பரத்தின் உறவினர்கள் ஏமாற்றி இருந்த சிறு நிலத்தையும் பிடுங்கிக்கொண்டு துரத்திவிடுகின்றனர்,

அப்பாவியான செல்லாயி என்ன செய்வது என்று அறியாமல், தன் 5 மகன்களையும் கூட்டி கொண்டு ஊருக்கு வெளியே உள்ள குடிதாங்கி குளம் என்ற குளக்கரையில் ஒரு ஓலை குடிசை போட்டு தங்குகிறாள்.

முதல் 3 மகன்களும், தந்தை சிதம்பரம் இருந்த போது திண்ணை பள்ளியில் அரிச்சுவடி படித்ததோடு சரி.

செல்லாயி, இளைய மகன்களை திண்ணை பள்ளியில் விட்டு விட்டு முதல் 3 மகன்களுடன் வயல்களில் கூலி வேலை செய்து வந்தாள்.

அந்த 5 பிள்ளைகளில், மூன்றாம் மகனின் பெயர் நல்லமுத்து, இவரது வாழ்கையை தான் நாம் இன்று பார்க்கபோகிறோம்.

நல்லமுத்து, தனது பத்தாவது வயதிலிருந்து வயல்களில் கூலி வேலை பார்த்துவந்தான், தனது 15ஆவது வயதில், அந்த ஊரில் இருந்த ஒரு பணக்காரரிடம், ஒரு சிறு பகுதி வயலை தனக்கு பண்ணையம்(குத்தகை) செய்ய தருமாறு கேட்கிறான். நல்லமுத்துவின் தைரியத்தை பாராட்டி அந்த பண்ணையாரும் ஒரு சிறு பகுதியை ஒதுக்கி தருகிறார்.

சுமார் 5 வருடங்கள் கடின உழைப்பு, சிக்கனம் என்று வாழ்ந்து பின், சிறுக சிறுக பணம் சேர்த்த நல்லமுத்து, தனது 20 வயதில் தான் குத்தகைக்கு வேலை செய்த நிலத்தை விலைக்கு தர முடியுமா என்று அந்த பண்ணையாரிடம் கேட்கிறார்,

பண்ணையாரும் இவரது அயராத உழைப்பை கண்டு பாராட்டி அந்த நிலத்தை விலைக்கு கொடுக்கிறார்.

பின்னர், நல்லமுத்து, தனக்காக ஒரு சிறு வீடு கட்டிக்கொண்டு, தன் தாயுடன், வாழ்கிறார். அவரது முதல் அண்ணன் மட்டும் நடுவே இறந்து விடுகிறார்,

அவரது தாய் நல்லமுத்துவுக்கும் மற்ற சகோதரர்களுக்கும் திருமணம் செய்து வைக்கிறார். அவர்கள் அனைவரும் ஒரே தெருவில் வேறு வேறு வீடுகள் அருகருகே வாழ்ந்தனர். அனைவரும் விவசாயமே செய்தனர்.

களக்காடு என்பது காவேரி போல பெரிய அளவில் ஆற்று பாசனம், உள்ள ஊர் அல்ல, பருவமழையை நம்பி மட்டுமே விவசாயம் செய்யவேண்டும். நல்லமுத்து அப்படியும் அருமையாக விவசாயம் செய்து வந்தார்,

எனக்கு சுமார் 10 வயது இருக்கும் போது நானே நேரில் பார்த்துள்ளேன், அப்போது நல்லமுத்து சுமார் 10 ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்திருந்தார் தனது வீட்டில் 2 பசுமாடுகளும், 15 எருமை மாடுகளும் வைத்திருந்தார்,

அவரது மனைவி சொர்ணத்தம்மாளுக்கு செலவுக்கு பன தரவே மாட்டார், நல்லமுத்து ஊதாரி என்பதால் அல்ல, சொர்ணத்தம்மாளுக்கு அவரிடமிருந்து பணம் தேவைப்படவேயில்லை, மாடுகளில் இருந்து வீட்டில் வைத்தே பால் வியாபாரம் செய்வார்,

அருகில் இருந்த கூட்டுறவு பண்ணையில் சென்று பால் கறந்து கொடுத்து மாதாமாதம் பணம் வாங்கிகொள்வார்.

நல்ல முத்துவின் வீட்டுக்கு பின் இரண்டு ஆள் ஆழத்துக்கு ஒரு மிகப்பெரிய எருக்குழி இருக்கும். மாடுகளின் சாணம், சிந்தும் வைக்கோல், வீட்டில் உள்ள குப்பை, மீதமான கெட்டுபோன உணவுகள் எல்லாம் அதில் தான் கொட்டுவார்கள்.

நல்லமுத்து, தனது வீட்டுக்கு, சமையல் எண்ணை, கடுகு போன்ற ஒருசில மளிகை சாமான்கள் தவிர வேறு எதுவும் கடையில் வாங்கி நான் பார்த்ததில்லை.

தனது மொத்த வயலில் பெரும்பாலும், கேரளாவில் நேந்திரங்காய், என்று சொல்லப்படும் ஏத்தன் என்ற வகை வாழையை மட்டுமே பயிரிடுவார்.

ஒரு சிறு பகுதி நிலத்தில் சுழற்சி முறையில், நெல், உளுந்து, தொவரை, பருத்தி, போன்றவற்றை பயிர் செய்வார்

இவற்றில், வாழை, பருத்தியை தவிர மற்றவற்றை விற்க மாட்டார்,

நெல் மற்றும் பருப்பு வகைகளை தனது வீட்டுக்கு மட்டுமே பயன் படுத்துவார், அவருக்கு பிள்ளைகளே 7 ஆயிற்றே.

நான் பார்த்தபோது, வடக்குவீடு என்று அழைக்கப்படும் அவரது மற்றொரு வீட்டில், நெல்லும், பருப்பும் மூட்டைகளில் அடுக்கி வைத்திருப்பதை பார்த்திருகிறேன். அந்த வீடு முழுவதும் நெல்லும் பருப்பு மூட்டைகளும் மட்டுமே இருக்கும்.

நீங்கள் ஏன் அரசு கொள்முதல் கூடங்களில் விற்பதில்லை என்று கேட்டால் சிரித்துவிட்டு நகர்ந்துவிடுவார்,

ரொம்ப அழுத்தி கேட்டால், அதுக்கு பதிலாக, நான் நெல்லை என் மாடுகளுக்கு திவனமாக போடுவேன் என்பார்.

வாழைக்குலைகள் வெட்டும் நேரம் வரும் போது மற்ற விவசாயிகள் தரகர்களிடம் விலை பேசிக்கொண்டிருப்பர்கள்

நல்லமுத்து மட்டும், அந்த தரகர்களின் லாரி ஓட்டுனர்களிடம், உங்கள் லாரிகளில், மிச்சம் இருக்கும் காலி இடத்தில் என் வாழைக்குலைகளை ஏற்றி செல்ல கூலி எவ்வளவு வேண்டும் என்று பேரம் பேசிக்கொண்டிருப்பார்.

தன் பிள்ளைகள், மற்றும் பேரன்கள் மூலம் தனது வயலில் வெட்டப்பட்ட வாழைக்குலைகளில் காப்பியிங் பென்சிலால் "சி.நா" என்று அடையாளக்குறி போட்டு, அந்த வாழைக்குலைகள் 5 – 6 லாரிகளில் பிரித்து ஏற்றி, பின் அந்த லாரிகளில் ஒன்றிலே ஏறி திருவனந்தபுரத்துக்கு செல்வார்.

பின் தன் வாழைக்குலைகளை அங்குள்ள மொத்த வியாபாரிகளுக்கு நேரடியாக விற்று விட்டு பணத்துடன் திரும்புவார், வந்தவுடன் அந்த பணத்தில் ஏதாவது நிலத்தை விலைக்கு வாங்குவார்.

அவர் என்றுமே தங்கத்தில் முதலீடு செய்ததேயில்லை, வீட்டில் பெண்களுக்கு திருமணம் என்றால் ஏதாவறு வயலை விற்றுவிடுவார் அந்த பணத்தில் திருமணம் முடித்து அனுப்புவார்.

அவருக்கு 4 மகள்கள் மற்றும் 3 மகன்கள், எல்லோரையும் நன்றாக படிக்கவைத்தார்.
4 பெண்களுக்கும் அரசு அதிகாரிகளை மாப்பிள்ளையாக தேடி திருமணம் செய்து வைத்தார்.

பெரிய மகன் அரசுத்துறையில் வேலைக்கு சேர்ந்தார், அடுத்த மகன் BA படித்துமுடித்து தன் தந்தையுடனே விவசாயம் பார்க்கிறார், கடைசி மகன் மட்டும் சென்னை வந்து ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.

அவரது விவசாய முறையே அலாதியானது,
  1. வயலில் உள்ள கழிவுகள், வீட்டில் உள்ள மாடுகளுக்கு, 
  2. வீட்டில் மாடுகளின் கழிவுகள் மீண்டும் வயலுக்கு, 3. உணவுக்கு நேரடியாக வயலிலிருந்தே விழை பொருட்கள், 
  3. வருமானத்துக்கு வாழை போன்ற பணப்பயிர்கள், 
  4. விவசாயத்தில் வரும் வருமானத்தை மறுபடியும் விவசாயத்திலேயே முதலீடு செய்வது 
  5. எந்த காலத்திலும் தரகர்களிடம் போகாமல், தன் விளைப்பொருட்களை தானே நேரடியாக விற்பது.
  6. விவசாயத்தில் புதிதாக என்ன என்று தவறாமல் வானொலில் கேட்பது, பின் அதை வயலில் செயல்படுத்தி பார்ப்பது, இப்படி பல.

நல்லமுத்து விவசாயத்தை ஒரு முழுநேர தொழிலாகவே செய்தார், அவர் எந்த காலத்திலும் அரசாங்கத்தை எதற்கும் எதிர்பார்க்கவில்லை,

மழை பொய்த்துபோவது, சூறைக்காற்றில் வாழைகள் சரிந்து விழுவது, வெள்ளம் என்று அவரும் பல இயற்க்கை சீற்றங்களை சமாளித்து தான் விவசாயம் செய்தார்.

நல்லமுத்து, 2003-ல் தனது 98ஆவது வயதில் இறந்தார், இறப்பதற்கு 3 மாதம் முன்பு வரை தினமும் விவசாயம் செய்தே வந்தார்.

ஒரு விவசாய கூலியாக 10 வயதில் தன வாழ்கையை தொடங்கிய நல்லமுத்து, 98 வயதில் இறக்கும் போது தன் மகன்களுக்கு சொந்தமாக முதல் தளத்துடன் கூடிய மூன்று கான்க்ரீட் வீடுகள், 20 ஏக்கர் விவசாயம் நிலம், இத்தனையும் விட்டு சென்றார்.

அவர் செய்த ஒரே தொழில் விவசாயம், அவரது ஒரே முதலீடு அவரது உழைப்பு.

இன்றும் தேனி, கம்பம், போடி, கோவை, ஈரோடு போன்ற பகுதிகளில் சும்மா புலம்பிகொண்டிராமல், வெற்றிகரமாக விவசாயம் செய்பவர்கள் பலர்.

இன்னும் சொல்லப்போனால், நீர் ஆதாரங்கள் பெரிய அளவில், விழுப்புரம் போன்ற பகுதிகளில் கூட வெற்றிகரமாக விவசாயம் செய்பவர்கள் பலர்.

எனக்கு தெரிந்து தஞ்சை பகுதி விவசாயிகள் மட்டுமே, அரசாங்கம் கவனிக்கவில்லை என்று புலம்புவது என்று நினைக்கிறேன்.

விவசாயி சோறு போடுகிறான், குழம்பு ஊத்துகிறான் என்று செண்டிமெண்டாக பேசாமல், அவர்கள் தங்கள் தொழிலை லாபகரமா செய்ய என்ன வழி என்று அவர்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்.

விவசாயிகளின் தற்கொலைகளை அவமானப்படுத்துகிறாய் என்று சொல்பவர்கள் ஒன்றை கவனிக்க தவறுகிறார்கள்,

பெட்டிகடைகாரன் கூட தற்கொளை செய்கிறான், ஐடி-யில் வேலை செய்பவன் கூட மனைவியுடன் சேர்ந்து மாடியில் இருந்து, குதிக்கிறான், தற்கொலை என்பது ஒரு தனிமனிதனின் உளவியல் சார்ந்த்தது

நீ குப்புரப்படுத்துகொண்டு யோசித்து நல்லமுத்து என்று அழகாக ஒரு கதை எழுதினால் நாங்கள் நம்ப முடியாது என்று சொல்பவர்களுக்கு,

அந்த நல்லமுத்துவின், முதல் மகளாக பிறந்த பெண் செல்லம்மாள் தான் என் தாயார்.

ஆம், என் பாட்டன், ஆண்டபரம்பரை எல்லாம் இல்லை, ஒரு விவசாய கூலியாகத்தான் தன் வாழ்கையை தொடங்கினார், எழுதப்படிக்க தெரியாதவர் தான், ஆனால் அவர் தான் இறக்கும் போது, தன் 17 பேரக்குழந்தைகளுக்கு உழைப்பின் அருமையை தன வாழ்வில் மூலம் சொல்லிக்கொடுத்தார் என்று நான் எப்போதுமே பெருமை கொள்வேன்

Wednesday, August 2, 2017

தமிழ்நாட்டின் மிக பெரிய ஊழல் ஊற்றுக்கண்கள்

தமிழ் நாது அரசின் வருடாந்திர செலவுகள் சுமார் 1,50,000 கோடிகள். இந்த செலவுகள் பல்வேறு வகையான வரிகள் மூலம் வசூல் செய்தது, பல்வேறு நலத்திட்டங்களுக்கு செலவு  செய்யப்படுகிறது.

இதில்
1. முக்கியமான செலவு PDS என சொல்லப்படுகிற ரேஷன் கடை மானியம் – வருடத்திற்கு 5,300 கோடி ரூபாய், பொருட்களை குறைந்த விலைக்கு கொடுப்பதற்காக மட்டுமே செலவு செய்யப்படுகிறது
2. முக்கியமான வரவு TASMAC என சொல்லப்படுகிற மதுபான விற்பனையின் மூலம் வரும் வருமானம் – வருடத்திற்கு சுமார் 25,000 கோடி ரூபாய்.

இந்த இரண்டு துறைகளில் என்ன ஊழல், அதனால் மக்களுக்கும் அரசுக்கும் என்ன அளவில் பன இழப்பு என்று பார்ப்போம்.

1. PDS – ரேஷன் கடைகள்.
தமிழகத்தில் மொத்தம் 4 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன

  1. பச்சை அட்டை – எல்லா பொருட்களும் உண்டு - 1,91,53,352
  2. வெள்ளை அட்டை – அரிசி தவிர எல்லா பொருட்களும் உண்டு - 10,79,387
  3. காக்கி அட்டை (காவலர்களுக்கானது) – எல்லா பொருட்களும் உண்டு - 66,478
  4. வெள்ளை அட்டை – எந்த பொருட்களும் கிடையாது - 65,169

மொத்த ரேஷன் கடைகளின் எண்ணிக்கை 25,532 – முழுநேரக்கடைகள் 9,154- பகுதிநேரக்கடைகள் ஆக மொத்தம் 34,686 கடைகள்

இந்த 34,686 கடைகளின் மூலம், செய்து உணவு பொருட்கள் மக்களுக்கு குறைந்த விலையில் கொடுக்க 5,300 கோடி ரூபாய் அரசால் செலவு செய்யப்படுகிறது.

ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் இதில் பாதியளவே மக்களுக்கு போகிறது மீதம் உள்ள பொருட்கள் அந்த கடை ஊழியர்களால் வெளி சந்தையில் விற்க்கபடுகிறது அந்த பணம், ரேஷன் கடை கடைநிலை ஊழியரிலிருந்து மந்திரி வரை பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

சராசரியாக, 1000 குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற விகிதத்தில் இந்த கடைகள் செயல்படுகின்றன,

அதாவது வருடத்திற்கு ஒரு ரேஷன் கடைக்கு சுமார் 16 லட்ச ரூபாய் மதிப்பிலான உணவுபொருட்கள் விற்பனைக்கு அனுப்பபடுகிறது,

ஒவ்வொரு கடையிலும் வருடத்திற்கு சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பிலான உணவுபொருட்கள், அந்த கடை ஊழியர்களால் வெளி சந்தையில் விற்கப்படுகிறது,

அதாவது மாதம் சுமார் 66,000 ரூபாய் ஒவ்வொரு ரேஷன் கடை ஊழியரும் திருட்டுத்தனமாக வீட்டுக்கு கொண்டு செல்கிறார், 

மக்களின் வரிப்பணம் பணம் ரூபாய் 2650 கோடி ரூபாய் வருடத்திற்கு நேரடியாக வீணடிக்கப்படுகிறது.

2. TASMAC – மதுபானகடைகள்

இந்த TASMAC – துறையின் கடந்த ஆண்டு வருமானம் ரூபாய் 25,000 கோடிகள், இந்த துறை நேரடியாக நடத்து கடைகளின் எண்ணிக்கை சுமார் 6500. தற்போது உச்ச நீதிமன்ற நெடுஞ்சாலை தீர்ப்பின் பிறகு சுமார் 3000 கடைகள் மூடப்பட்டாலும் விற்பனையின் அளவு குறையவில்லை.

எப்படி என்றால் சமீபத்தில் சொந்த ஊரான நெல்லை சென்றுயிருந்த போது நான் கண்டது, நெல்லை நகரில் மட்டும் முன்பு 24 மதுபான கடைகள் இருந்தன உச்ச நீதிமன்ற நெடுஞ்சாலை தீர்ப்பிற்கு பின், நெல்லை நகரில் வெறும் 5 கடைகள் மட்டுமே உள்ளன,

அருகில் அதாவது 50 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில், தென்காசி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், செங்கோட்டை, சேரன்மகாதேவி போன்ற பல ஊர்களில் மதுபான கடைகளே கிடையாது.

அப்படியானால் அந்த பகுதி மக்கள் எல்லாம் குடியை விட்டுவிட்டு திருந்திவிட்டார்களா இல்லை, எல்லோரும் பேருந்து, ரயில், பைக், ஷேர் ஆட்டோ, இப்படி பலவகையில் நெல்லை நகரில் உள்ள அந்த 5 கடைக்கு எப்படியாவது வந்து மிக மிக நீளமான வரிசைகளில் நின்று வாங்கி சென்று தங்கள் வசதிக்கேற்ற இடங்களில் வைத்து குடிக்கின்றனர்.

TASMAC வருடத்திற்கு 25,000 கோடிக்கு விற்பனை செய்வது ஒருபுறம் இருக்கட்டும், இந்த விற்பனை பெரும்பாலும் க்வாட்டர் என சொல்லப்படும் ரூ.100 மதிப்பிலான பாட்டில்களில் தான் நடைபெறுகிறது.

அப்படி என்றால் சுமார் 250 கோடி 100ரூபாய் பாட்டில்கள் ஒரு வருடத்திற்கு விற்கபடுகிறது. இந்த கடை ஊழியர்கள் ஒவ்வொரு பாட்டிலுக்கு ரூ.5 அதிகம் வசூலிக்கிறார்கள்.

அதாவது ஒருவருடத்திற்கு, ஒவ்வொரு பாட்டிலுக்கு ரூ.5 வீதம் 250 கோடி பாட்டில்கள் என்ற கணக்கில்

ஒரு வருடத்திற்கு சுமார் 750 கோடி ரூபாய் பணத்தை போது மக்களிடமிருந்து நேரடியாக திருடுகிறார்கள்.

இந்த இரண்டு திருட்டுகளையும் தடுக்கவேண்டுமானால் என்ன செய்யலாம். இந்த இரண்டு கடைகளிலும் சுத்தமாக பணபரிவர்த்தனையை தடுக்கவேண்டும்.

அதாவது இரண்டு கடைகளிலும், பொருட்கள் வாங்க மக்கள் வங்கி அட்டைகளை மட்டுமே பயன் படுத்தவேண்டும் என்று மாற்றவேண்டும்.

தமிழ் நாட்டில் எல்லோருமே வங்கி அட்டை வைத்துள்ளனர். கேஸ் மானியம் வங்கிகளில் தான் போடப்படும் என்ற போதே 90% மக்கள் வங்கி கணக்கு தொடங்கிவிட்டார்கள்.

ரேஷன் கடைகளில், ஒரு மாத பொருட்கள் வாங்க அதிபட்சம் தேவையே ரூ.100 மட்டுமே, ரேஷன் கடைகளில் பெரும்பாலும் பொருட்கள் வாங்க செல்வது பெண்களே அவர்கள் அதை சமாளித்துவிடுவார்கள்.

ரேஷன் கார்டில் ஆதார் அட்டையை இணைப்பத்தை விட வங்கி அட்டையை இணைத்தால் போதும் ரேஷன் பொருள்கள் திருடு போகாது

இப்படி செய்தால் ரேஷன் கடைகளில் மொத்தமாக பில் போட முடியாது 15,000-20,000 என்று ஒரு கார்டில் தேய்த்தால் மாட்டிக்கொள்வார்கள் நூறு நூறு ரூபாயாக எத்தனை கார்டு தேவைப்படும் மாதம் 65,000 ரூபாய் பில் போடுவதற்கு. எனவே ரேஷன் கடைகளில் பொருட்களை திருடுவது நின்றுவிடும்

மதுபான கடையில் ஏழை தொழிலாளி எப்படி வங்கி அட்டை இல்லாமல் சிரமப்படுவானே என்றால் அது குடிகாரன் கவலை அவன் பார்த்துகொள்வான்,

“சார் உங்க அக்கவுண்டில் பாலன்சு இருந்தா ஒரு க்வாட்டர் வாங்கித்தாங்க 100 ருபாய் பணமாக தருகிறேன்” என்று சமாளித்துகொள்வான்,

நிறைய பேரு காசே இல்லாமல் தினமும் குடிக்கிறான், கார்டு இல்லாமலா குடிக்காமல் இருக்க போகிறான்.

மதுபானகடையில், சோதனையின் போது எந்த ஊழியர் ஊழியர் கையில் ரொக்க பணம் வைத்திருந்தாலும் உடனே வேலை நீக்கம் செய்யவேண்டும். பின்னர் இங்கும் மக்கள் 
பணம் திருடப்படுவதை தடுக்கலாம்.

அல்லது TASMAC கடைகளை மொத்தமாக மூடிவிட்டு, வெளி நாடுகளில் இருப்பது போல எந்த கடைகாரரும் மதுபானங்களை விற்கலாம், அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு NOC வாங்கி விட்டு என அறிவித்துவிடலாம்.

மதுவைவிட கெடுதலான சிகரெட்டை பெட்டிகடைகளில் விற்கும் போது, மதுவை விற்கலாமே என்ன தவறு. என்ன குடிப்பதற்கு ஹோட்டல் போல தனி உரிமம் வழங்க வேண்டும்,

மொத்தத்தில் டிஜிட்டல் தமிழ் நாடு ஆக்குவோம்

Book Wrapper

இந்த நூலை  வாங்க  விரும்பினால்  இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்     விலை ரூ.200 மட்டுமே